சத்திய சோதனை திரைவிமர்சனம்

cinema news movie review

ஆயிரம் நிரபராதிகள் தப்பிக்கலாம், ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது” என்பது நம் நீதித் துறையின் கொள்கை. ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் சட்டத்திடம் இருந்தும், நீதித்துறையிடம் இருந்தும் குற்றவாளிகள் தப்பித்துவிடுகிறார்கள், அப்பாவிகள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள், என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லி இருக்கும் படம் தான் ‘சத்திய சோதனை’ கரு

 

ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் நாயகன் பிரேம் ஜி, ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்க்கிறார். உடனே அந்த உடலை ஒரு ஓரமாக இழுத்து வைப்பவர், அந்த உடலில் இருக்கும் கைகடிகாரம், கைப்பேசி மற்றும் சிறிய தங்க சங்கிலி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்க செல்கிறார். அதே சமயம், காவல் நிலையத்தில் சரணடையும் கொலையாளிகள், கொலை செய்யப்பட்டவர் ஏகப்பட்ட தங்க நகைகளை அணிந்திருந்ததாக சொல்கிறார்கள். இதனால், அப்பாவி பிரேம் ஜி மீது சந்தேகப்படும் காவல்துறை, மற்ற நகைகள் எங்கே? என்று கேட்டு அவரிடம் அதிரடியாக விசாரணை நடத்த இறுதியில் அந்த தங்க நகைகள் என்ன ஆனது? அப்பாவியான பிரேம் ஜி-யை சட்டம் என்ன செய்தது? என்பதை வயிறு வலிக்க சிரிக்கும்படியும், சிந்திக்கும்படியும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா.

காதல், டூயட் என்று கதாநாயகனாக நடித்தாலும் பிரதீப் என்ற அப்பாவித்தனமான இளைஞர் வேடத்திற்கு சரியான தேர்வாக இருக்கிறார் பிரேம் ஜி. வெட்டுப்பட்டு இறந்து கிடப்பவரை பார்த்ததும் எந்தவித பதற்றமும் இன்றி, அந்த உடலை ஓரமாக இழுத்து வைத்துவிட்டு, அருகில் இருக்கும் பொருட்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் பிரேம் ஜி போன்ற ஒருவரை தற்போதைய காலக்கட்டத்தில் பார்ப்பது அபூர்வமானது என்றாலும், அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிகராக அல்லாமல் பிரதீப்பாக வாழ்ந்து கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார் பிரேம் ஜி.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்வயம் சித்தாவுக்கு ஒரு பாடல், சில காட்சிகள் என்று குறைவான வேலை கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி கதைக்கும் அவருக்கும் எந்த விதத்திலும் சம்மந்தம் இல்லை.

காவலர்களாக நடித்திருக்கும் சித்தன் மோகன் மற்றும் செல்வ முருகன் இருவரும் படத்தின் மற்றொரு ஹீரோக்களாக படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்கள். இவர்களுடைய முட்டாள்தனத்தால் காவல்துறை படும்பாடு சிரிப்பு சரவெடியாக வெடிக்கிறது. குறிப்பாக இவர்களின் வசன உச்சரிப்பு மற்றும் இயல்பான நடிப்பு கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

நீதிபதியாக நடித்திருக்கும் கு.ஞானசம்பந்தம், உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல், தவறே செய்யாதவர்களை பிடித்து அவர்களிடம் வசூல் செய்யும் காவலர்களை கலாய்க்கும் விதமாக நடித்து அசத்தியிருக்கிறார்.

கதைக்கு ஏற்ப பயணித்திருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

ரகுராம்.எம்-ன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருப்பதோடு, பாடல் வரிகள் புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

இயக்குநர் சுரேஷ் சங்கையா சொல்லியிருக்கும் கருத்து சமூக அவலத்தை தோலுறித்து காட்டுவதோடு, அதை அவர் நகைச்சுவை பின்னணியில் இயக்கிய விதம் சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது.

 

திரைக்கதை, காட்சிகள் மற்றும் நடிகர்களிடம் வேலை வாங்கிய விதம் ஆகியவற்றால் ஒரு திரைப்படமாக ரசிக்க முடிந்தாலும், படத்தில் காவல் நிலையத்தை கையாண்ட விதமும் மற்றும் அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள் லாஜிக் மீறலாக இருப்பதோடு, ஏற்றுக்கொள்ளும்படியும் இல்லை. மொத்தத்தில் ஒரு முறை பார்க்கலாம்

சத்திய சோதனை நம்மை சோதிக்கவில்லை சிரிக்க வைக்கிறது.