ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்ட்டர்டெயின்மெண்ட் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ரகுகுமார், ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் கதாநாயகனாக கதிர் நடித்திருக்கிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, இசை – அம்ரிஷ், பாடல்கள் – கபிலன், மதன் கார்க்கி, சொற்கோ, படத் தொகுப்பு – பிரசன்னா.ஜி.கே., கலை இயக்கம் – ராஜா மோகன், சண்டை இயக்கம் – விக்கி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நஞ்சுண்டான்.
24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை. தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டுவரும் முகமே தெரியாத ஐந்து குற்றவாளிகளை சப்-இன்ஸ்பெக்டர் கதிர் 24 மணி நேரத்தில் எப்படி தேடிப் பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.
நாயகன் கதிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்க்கிறார். பணிக்கு சேர்ந்து 2 வருடங்கள்தான் ஆயிற்று. பணியில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். உயரதிகாரிகளின் பேச்சை மதிப்பதுபோல் கேட்டுக் கொண்டு, மதிக்காதது போல் நடந்து கொள்பவர். இதனாலேயே 2 ஆண்டுகளுக்குள் 3 முறை சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார்.
வில்லன் லகுபரன் மதுரையில் இருந்து சென்னைக்கு குடியேறியவர். உடன் 4 தோழர்களும் இருக்கிறார்கள். ஆள் கடத்தல்தான் லகுபரனின் முக்கியத் தொழில். பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகளை கடத்தி பணம் பறிப்பதை கொஞ்சமும் குற்றவுணர்ச்சியில்லாமல் செய்து வருகிறார்.
பெரிய நகைக் கடை முதலாளியான ரிஷியின் மகனை இந்த டீம் கடத்துகிறது. உடன் ஒரு ஏழை பையனையும் சேர்த்துதான். கேஸ் போலீஸிடம் வருகிறது. அஸிஸ்டெண்ட் கமிஷனர் மாரிமுத்து கதிரையும் சேர்த்து தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை நடத்துகிறார். போலீஸின் அறிவுரைப்படி ரிஷி பணத்தைக் கொடுக்க சிறிது தயங்க தயவு தாட்சாண்யமே இல்லாமல் கடத்திச் சென்ற ஏழை பையனை கொலை செய்து போடுகிறார் லகுபரன்.
இதனால் பயந்துபோன மாரிமுத்துவின் உத்தரவுப்படி லகுபரன் கேட்ட 5 கோடி ரூபாயை ஒரு பேக்கில் வைத்து அதனை கடத்தல்காரனிடம் ஒப்படைக்கிறார் கதிர். இருந்தும் அந்த பேக்குக்குள்ளேயே ஜி.பி.எஸ்.ஸூடன் செயல்படும் செல்போனை இணைத்து வைத்து குற்றவாளிகளை பிடிக்க முயல்கிறார் கதிர். இதில் பணத்தை வாங்கியவன் தப்பிக்க நினைக்கும்போது அவனைச் சுட்டுக் கொல்கிறார் கதிர். உயரதிகாரியான மாரிமுத்து சொல்லாத விஷயத்தை செய்ததால், மீண்டும் சஸ்பெண்ட்டாகிறார் கதிர்.
தனது உயிருக்குயிரான நண்பனை இழந்த கோபத்தில் கொதிக்கிறார் லகுபரன். இதற்கான பழிக்குப் பழியாக கதிரை பழி வாங்க நினைக்கிறார் லகுபரன். கதிரின் அண்ணன் மகளை கொலை செய்யப் பார்க்கிறார். ஆனால் குழந்தை தப்பித்துக் கொண்டு, இப்போதைக்கு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறது.
இருந்தாலும் கதிரின் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கொலை செய்யப் போவதாக கதிரிடமே சொல்கிறார் லகுபரன். தான் சஸ்பெண்ட்டில் இருந்தாலும் தன் வழியிலேயே போய் அவர்களை பிடிக்க முயல்கிறார் கதிர்.
இது முடித்ததா.. இல்லையா… என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
வில்லனான லகுபரன்தான் படத்தையே தாங்கிப் பிடித்திருக்கிறார். அந்த வயதுக்கேற்ற கோபம், ஆவேசம், ருத்ரம் அனைத்தையும் முகத்தில் காட்டி நடித்திருக்கிறார். போலீஸாகவே இருந்தாலும் போட்டுத் தள்ள நினைக்கும் அளவுக்கு முட்டாள் வில்லன் கேரக்டருக்கு மிக எளிதாக பொருந்தியிருக்கிறார் லகுபரன்.
சிருஷ்டிக்கு அதிகம் வேலையில்லை. இவரின் அறிமுகக் காட்சியில் ஒரு நிமிடம் ‘திடுக்’ என்ற மனநிலை வந்தாலும் சிருஷ்டி பேசும் வசனத்தின் மூலமே ‘ஆள்’ யாரென்பது தெரிந்துவிட அந்தக் காட்சி புஸ்வானமாகிவிட்டது. படத்தில் பாடல் காட்சிகளே இல்லை என்பதால், அதற்கும் வேலையில்லாமல் சில காட்சிகளில் மட்டுமே நடித்துக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.
மகேஷ் முத்துச்சாமியின் ஒளிப்பதிவுதான் படத்தின் நாயகன் என்று சொல்லலாம். முதல் ஷாட்டில் இருந்து கடைசிவரையிலும் ஒரே மாதிரியான கலர் டோனை கீப் அப் செய்திருக்கிறார். இரவு நேரக் காட்சிகளில் அதன் தன்மை கெடாமல் படமாக்கியிருக்கிறார்.
சண்டை காட்சிகளிலும், பரபரப்புடன் டென்ஷனை கூட்டும் காட்சிகளிலும் படத் தொகுப்பாளரின் முத்திரை தனியே தெரிகிறது. பின்னணி இசையமைத்தவர் காதுகளுக்கு அதிகம் வேலை கொடுக்காமல் இசை மட்டும் தனியே தெரிவதை போல இசைத்திருக்கிறார்.
கிராமத்து கோவில் திருவிழாவில் இரவில் போடப்படும் சூரசம்ஹாரம் நாடகத்தில் துவங்கும் படம், லகுபரன் என்னும் சூரனின் வதத்துடன் முடிவடைவது மட்டும் கச்சிதமான பொருத்தம். பேசாமல் படத்திற்கு ‘சூரசம்ஹாரம்’ என்றே பெயர் வைத்திருக்கலாம்.
காவல் துறையினருக்குத்தான் முதலில் சட்டம், ஒழுங்கு, மனித உரிமை இதையெல்லாம் போதிக்க வேண்டும். சீருடை அணிந்திருப்பதாலேயே மற்றவர்களை அடித்து, உதைத்து, திருத்த நினைக்கும் போக்கு சட்டப்படி குற்றம் என்பதையே கணக்கில் கொள்ளாமல் கதிரின் கேரக்டர் ஸ்கெட்ச் இருப்பதே முதல் தவறாக இருக்கிறது. கடைசியில் லகுபரனை அவர் தீர்த்துக் கட்டிவிட்டு கடைசியில் இதனை ஆபரேஷனில் ஒன்றாக சேர்த்துச் சொல்வது நல்ல காமெடி.
எப்படியிருந்தாலும் படத்தின் கதை படு பயங்கர லாஜிக் எல்லை மீறலாகவும், தவறாகவும் இருக்கிறது. லகுபரன் ஆள் கடத்தல் தொழிலுக்கு போடும் ஸ்கெட்ச் மிகவும் ஆபத்தானது. கடத்தல் தொழிலில் ஈடுபடும் கிரிமினல்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் நிச்சயமாக அவர்களது அடுத்த ஆபரேஷன் சக்ஸஸாகத்தான் முடியும். அந்த அளவுக்கு டீடெயிலாக ஆள் கடத்தல் தொழிலை சொல்லிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இது தப்பில்லையா ஸாரே..?
பெற்ற தகப்பன் கொல்லப்பட்ட பின்பு அதைப் பற்றியே கவலைப்படாமல் தான் மட்டுமே களத்தில் குதித்து லகுபரன் கோஷ்டியை பிடிக்க நினைக்கும் கதிரின் செயலும் முட்டாள்தனமானது.
இதே திரைக்கதையை மாற்றியமைத்து மாரிமுத்து மூலமாகவே தனி போலீஸ் படையை அமைத்து அதில் கதிரையும் இணைத்துக் கொண்டு லகுபரன் கோஷ்டியை தேடிப் பிடித்து சம்ஹாரம் செய்வதுபோல அமைத்திருந்தால் நிச்சயமாக இந்தக் கதையை நியாயமானது என்று ஒத்துக் கொண்டிருக்கலாம்.
காதில் பூச்சுற்றுவதுபோல தனது நண்பர்களான மற்றைய ஸ்டேஷன்களின் எஸ்.ஐ.க்களுக்கும் பிரச்சினையை கொடுத்து அதில் ஒருவனை பலி கொடுத்து, இன்னொருவனின் பிள்ளையை கடத்தலுக்குக் கொடுத்து.. தனி மனித துதி பாடலுடன், நாயக பிம்பத்துடன் இந்தப் படத்தை உருவாக்கித் தொலைத்திருக்கிறார் இயக்குநர் நவீன் நஞ்சுண்டான். நாயக பிம்பத்தை ஏற்கும் அளவுக்கு கதிர் அவ்வளவு பெரிய ஹீரோ இல்லையே ஸார்…?
சுஜா வாருணியின் கதை, அந்தப் பையனின் கதைத் திருப்பம்.. அவனைக் கூட்டிக் கொண்டே ஓடுவது.. கடைசியில் அந்தப் பையன் இவர்களைக் காப்பாற்றுவது என்று திரைக்கதையில் முடிச்சுக்களை போடுவதும், அவிழ்ப்பதும் அத்தனை சுவாரஸ்யமாக இருந்தும் அதன் அடித்தளமான கதை தள்ளாட்டம் ஆடுவதால், முழுமையாக இதனை ரசிக்க முடியவில்லை. கடைசிவரையிலும் போதையான கண்களுடன்தான் பார்க்க முடிகிறது.