full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

அரசியலுக்கு வர வயது தடையில்லை : சத்யராஜ்

சிபிராஜ் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் சத்யா. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார். நடிகர் சத்யராஜ் தயாரித்துள்ளார்.

சத்யா படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது நடிகர் சத்யராஜ், “தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய படம் சனம். அந்த படத்தை எனது மனைவியும், மகளும் பார்த்தனர். அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அந்த படத்தை தமிழில் சிபிராஜை நடிக்க வைத்து தயாரிக்கலாம் என்று தெரிவித்தனர். அவர்கள் விருப்பத்தை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனாலும் நான் படத்தை பார்க்கவில்லை.

படத்துக்கு சத்யா என்று தலைப்பு வைக்க முடிவு செய்தோம். கமல்ஹாசன் ஏற்கனவே சத்யா பெயரில் தயாரான படத்தில் நடித்து இருக்கிறார். எனவே அவரிடம் அனுமதி பெற்று அந்த தலைப்பை பயன்படுத்தினோம். சினிமாவில் கதை தான் முக்கியம். கதை தான் கதாநாயகனாக இருக்கிறது.

சினிமாவில் யார் நினைத்தாலும் ஒரு நடிகனை உருவாக்க முடியாது. அவர்களாகவே படிப்படியாக முன்னேறி வெற்றி பெறுகிறார்கள். நான் தாடி வளர்த்து அப்பா கதாபாத்திரங்களில் நடித்து சம்பாதித்த பணத்தை இந்த படத்தில் முதலீடு செய்து இருக்கிறேன். அந்த பணம் வீணாகவில்லை. போட்ட காசு என் கைக்கு வந்துவிட்டது.

இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் சனம் தெலுங்கு படத்தையே நான் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. சத்யா படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் வந்தது. அரசியலுக்கு வருவதற்கு வயது தடை இல்லை. எம்.ஜி.ஆர் 35 வயதில் தான் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றார்.” என்று பேசினார்.

நடிகர் சிபிராஜ் கூறும்போது, “எனது 4 வயது மகன், நான் நடித்த எல்லா படங்களையும் பார்க்கிறான். இதனால் நான் கதாநாயகிகளுடன் நெருக்கமான காதல் காட்சிகளிலும் முத்தக் காட்சிகளிலும் நடிப்பதை தவிர்க்கிறேன்” என்றார்.