ஒரு பக்கம் மிஷ்கின், இன்னொரு பக்கம் ராம் இருவரில் யாரை பார்ப்பது? இருவரையும் தாண்டி குண்டா, குட்டையா மிஷ்கின் அடியாளாக வரும் ஒருவர் (பெயர் தெரியவில்லை, மன்னிக்கவும்) அவரைப் பார்ப்பதா? அட இவர்களை விடுங்கள், பூர்ணா.. “எய்யா சாமி, எங்கய்யா இருக்க?” என்று தம்பியிடம் போன் பேசுவதும், “அத்தான்” என்று ராமிடம் குழைவதுமாய் ஒரு நிறைமாத கர்ப்பிணியாக வருகிறாரே அவரைப் பார்ப்பதா?.
இப்படி ஆளாளுக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு நடிக்குமளவிற்கு, அப்படியென்ன பிரமாதமான கதை இது?
வாயாலேயே வடை சுடும் ஒரு சவரத்தொழிலாளி. ஏன், எதற்கென்றே தெரியாமல் தும்மினால் கூட மூக்கையறுக்கும் அளவிற்குக் கோபம் கொள்கிற ஒரு “பரோல் கைதி” ரவுடி. சவரத்தொழிலாளி தன் மைத்துனரின் காதல் திருமணத்தை நடத்தி வைக்கக் தன் நிறைமாத கர்ப்பிணி மற்றும் குழந்தைகளோடு புறப்பட, பரோல் முடிந்து 6 மணிக்கு சிறைக்குத் திரும்ப வேண்டும் என்கிற சூழலில் அந்த ரவுடி வெளியில் கொஞ்சம் சுற்றலாம் என புறப்பட.. இருவரும் எதிர்பாராத ஒரு சூழலில் சந்திக்கும்போது அது சண்டையாக மாற.. அங்கிருந்து ஆரம்பிக்கிறது “சவரக்கத்தி”யின் கதை.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை மிஷ்கின் தான். எப்போதுமே மிஷ்கினின் ஒன்லைன் மிகவும் எளிமையாகத்தான் இருக்கும். அது பயணிக்கும் களமும், சூழ்நிலைகளும்.. அது சந்திக்கிற மனிதர்களும் தான் நம்மை வியந்து பார்க்க வைப்பவையாக இருக்கும். அப்படித்தான் சவரக்கத்தியிலும், நம்மை ஆச்சர்யப்படுத்தும், நெகிழ வைக்கும் பல சூழ்நிலைகளும், பல மனிதர்களும் வந்து போவார்கள். எப்போதுமே மிஷ்கின் கதைகளில் அடிநாதமாய் இருக்கக் கூடியது மனிதமும், அதன் வேராகிய அன்பும் தான். இந்தக்கதையும் அதையே பேசுகிறது.
படம் ஆரம்பிக்கும் அதன் வடிவம் நமக்குக் கொஞ்சம் அந்நியமாய்ப் பட்டாலும் போகப்போக அதுவே புதிதாக நம்மை ஈர்த்துக் கொள்கிறது. ” டார்க் காமெடி” தமிழுக்கு பழையது தான் என்றாலும், இந்தக் கதையின் தன்மையிலும், அனைவரது நடிப்பிலும் அது புதிதாய்த் தெரிகிறது.
மிஷ்கினுக்கு தான் எந்த வகையிலும் சளைத்தவனல்ல என்று “கெத்து” காட்டியிருக்கிறார் இயக்குநர் ராம். தங்க மீன்களில் பார்த்தே அதே முகம் தான், அவரது “தளக்புளக்” தொப்பையைக் கூட இந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்..
அரோல் குரேலியின் இசை டைட்டில் கார்டு முதல் எண்டு கார்டு வரை நதியடி நீராய் சலனமில்லாமல் பயணித்து இதயம் நிறைகிறது. தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியிருக்கும் “அன்னாந்து பார்” பாடல் அழகோ அழகு. பின்னணி இசை முழுவதும் வயிலின் கொண்டு உயிர் கொடுத்திருக்கிறார்.
கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவில் ஒவ்வொரு ஃபிரேமும் கண்களைக் கட்டிப் போட்டிருக்கிறது. அவற்றை அழகாய் சிதைவுறாமல் எடிட் செய்திருக்கும் பெருமை சதீஸ்குமாரைச் சாரும்.
இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா, மிஷ்கினின் வார்ப்பு. அப்படியே அவரைப் போலவே ரசனை கொண்டவராக இருக்கிறார். ஒவ்வொரு காட்சியமைப்பிலும், நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கிற தொணியிலும் அது அப்படியே தெரிகிறது. வாழ்த்துகள் இளம் மிஷ்கினே!
“சவரக்கத்தி” யாரையும் எந்த காயமும் செய்யாமல், உங்களை சிரிக்க வைக்கும்.. நிறைய நெகிழ வைக்கும்.. அன்பினை உணர்த்தும்.. மனிதம் புரிய வைக்கும்!
குறையா?, அது ஆரம்பத்தில் எல்லோரும் கத்திக் கத்திப் பேசும் போது இருந்தது.. போகப் போக அதுவே செட்டாயிடுச்சு.. கொஞ்சம் பிழை பொறுத்து ரசிக்க நிறையவே இருக்கும் நல்லக்கத்தி இந்த “சவரக்கத்தி”!!