”‘பீஸ்ட்’ படம் ஓடினால் என்ன ஓடலனா எனக்கென்ன” – ‘தொடாதே’ இசை வெளியீட்டு விழாவில் கே.ராஜன் பேச்சு

Uncategorized
0
(0)
கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயக்குமார் தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ் இயக்கியிருக்கும் படம் ‘தொடாதே’. இபடத்தில் காதல் சுகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.  அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையாக ஜெயக்குமார் நடித்துள்ளார்.
 
ஒளிப்பதிவு ராஜேஷ், இசை ராஜா, பாடல்கள் பூமாதேவி, பாலமுருகன், ஜெயக்குமார், இணை இயக்கம் நாகேந்திரன், உதவி இயக்கம் பார்த்திபன், வள்ளி, சண்டைப் பயிற்சி சிவ பிரகாஷ், எடிட்டிங் நாகர் ஜி, நடனம் பாரதி, இணைத் தயாரிப்பு எஸ்.அலெக்ஸ், தயாரிப்பு எஸ்.ஜெயக்குமார், பிஆர்ஓ கோவிந்தராஜ்.
 
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநரும் தயாரிப்பாளருமான கலைப்புலி ஜி.சேகரன், இயக்குநர் லியாகத் அலிகான், இயக்குநர் ஈ.ராமதாஸ், இயக்குநர் ராசி அழகப்பன், இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸாலி, இயக்குநர் விருமாண்டி, நடிகர்கள் முத்துக்காளை, கூல் சுரேஷ், பாடலாசிரியர் முருகன் மந்திரம் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

தயாரிப்பாளர் கலைப்புலி ஜி.சேகரன் பேசுகையில்,

“’தொடாதே’ நல்ல தலைப்பு, அந்த தலைப்பு ஏற்றவாறு படமும் நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறது. இன்று இருக்கும் சங்கங்களால் யாருக்கும் எந்த உதவியும் கிடைப்பதில்லை. ஆனால், எங்கள் டிஜிட்டல் தயாரிப்பாளர் சங்கம் மூலம் பல உதவிகளை நாங்கள் சத்தமில்லாமல் செய்து வருகிறோம். எங்கள் சங்கம் மூலம் உருவான தொடரும் படம் போல் படங்கள் இன்னும் உருவாக உள்ளது. சங்கத்தில் பொருப்புக்கு வருபவர்கள் சேவை செய்யும் எண்னத்தில் வர வேண்டும், சம்பாதிக்கும் எண்ணத்தில் வர கூடாது. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

 

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன்,

“’தொடாதே’ பாடல்களையும் டிரைலரையும் பார்த்த போது படம் நல்ல கருத்தை சொல்ல வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. காதல் சுகுமார் காமெடி நடிகராக இருக்கும் போதே அவரை நான் ரசித்து பார்ப்பேன். இன்று ஹீரோவாக நடிக்கிறார் அவர் நிச்சயம் நன்றாக நடித்திருப்பார். சிறிய படம், பெரிய படம் என்று சொல்வார்கள், உண்மையில் சிறிய முதலீட்டில் எடுத்து பெரிய வெற்றி பெறும் படங்கள் தான் பெரிய படம், பெரிய முதலீட்டில் எடுத்து தோல்வியடையும் படங்களே சிறிய படம். பல கோடி செலவு செய்து படம் தயாரிக்கிறார்கள். 100 கோடி ரூபாய்க்கு மேலும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம், 30 கோடி ரூபாய் தான் வசூலிக்கிறது. ஆனால், ஹீரோக்கள் மட்டும் சம்பளத்தை 110 கோடி ரூபாய் என்று உயர்த்தி விடுகிறார்கள். இப்ப கூட ஒரு நடிகர், 65 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்தவர், 105 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். 100 கோடிக்கு மேல் இருந்தால் வாங்க, இல்லைனா வராதீங்க என்று சொல்றாராம். இப்படி அவர்களுக்கு 100 கோடி சம்பளமாக கொடுத்தால் படம் என்ன ஓடுகிறதா, அதிலும் நஷ்ட்டம் தான் வருகிறது. நான் எந்த நடிகரையும் குறிப்பிட்டு சொல்லல. நீங்கள் வேற மாதிரி போட்றாதீங்க.

 
இப்ப கூட என்ன வெளியில் பேட்டி எடுத்தாங்க, அரை மணி நேரம் எடுத்த பேட்டில், பீஸ்ட் படம் பற்றி என் கிட்ட கேக்குறாங்க, பீஸ்ட் ஓடினால் எனக்கென்ன, ஓடலனா எனக்கென்ன, என் கிட்ட பீஸ்ட்…பீஸ்ட்…என்று கேக்குறாங்க. இதை சொல்றதுக்காக நான் பயப்படவில்லை. காரணம், நான் விஜய் கிட்ட தேதி கேட்டு நிக்க போறதல்ல, பணம் கேட்டு நிக்க போறதல்ல. தயாரிப்பாளர்களை வாழ வைக்க வேண்டும், அதற்கு முன்னணி நடிகர்கள் உதவி செய்ய வேண்டும். அதற்காக தான் நான் குரல் கொடுக்கிறேன், தொடர்ந்து கொடுத்துக் கொண்டு தான் இருப்பேன். மதுவால் ஏற்படும் தீமைகளை சொல்லும் இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். மதுவால் ஏழைகளின் குடும்பமும், அவர்களுடைய வருமானமும் எப்படி  பாதிக்கப்படுகிறது, என்பதை நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன். அதனால் தான் என் பகுதியில் இருக்கும் பல மதுக்கடைகளை மூட நான் முயற்சித்து வருகிறேன். இப்போது கூட இது பற்றி முதல்வர் அவர்களிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறேன், அவரை அதை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.
நடிகர் முத்துக்காளை பேசுகையில்,
 
“’தொடாதே’ படத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கும் என் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மதுவை தொட்டால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி சீரழியும் என்பதற்கு நானே ஒரு உதாரணம். சென்னையில் இருந்து நான் வந்ததே, ஸ்டண்ட் கலைஞனாக வேண்டும் என்பதற்காக தான். ஆனால், அந்த ஸ்டண்ட் யூனியன் விழா ஒன்றில் என்னால் சரியான முறையில் செயல்படவில்லை. அதற்கு காரணம் மது. அந்த மதுவால் அப்போது அங்கு அவமானப்பட்டேன். அதனால், இனி அந்த மதுவை தொட கூடாது என்று முடிவு செய்தேன். ஐந்து வருடங்களாக நான் மது குடிப்பதில்லை. இன்று என் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. நடிப்பதோடு, படிக்கவும் செய்கிறேன். இரண்டு டிகிரி முடித்துவிட்டேன். மது பழக்கத்தை விடுவது என்பது சுலபமான காரியம் அல்ல, இப்போது பல அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வர முடியாமல் இறந்துக் கொண்டிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வர ஒரு வாய்ப்பு கிடைத்தது, அதில் இருந்து மீண்டு வந்தேன், வளமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த ‘தொடாதே’ படம் மூலம் பல மது பழக்கத்தில் இருந்து வெளியே வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன். இதுபோன்ற விழிப்புணர்வு படங்கள் நிறைய வர வேண்டும். இப்படி ஒரு படத்தை இயக்கிய அல்கெஸ் சார், தயாரித்த எஸ்.ஜெயக்குமார் சார் மற்றும் நடிகர் காதல் சுகுமார் ஆகியோரை வாழ்த்துகிறேன்.” என்றார்.
 
நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில்,
“காதல் சுகுமார் எனக்கு சுமார் 25 ஆண்டு காலமாக தெரியும். அப்போதே அவர் எனக்கு நடிப்பில் பல டிப்ஸ்களை கொடுப்பார். எப்படி பேச வேண்டும், இந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும், என்று ஐடியா கொடுப்பார், அப்போதே நான் அவர் பின்னாடி ஒளி வட்டம் தெரிவதை உணர்ந்தேன். அவர் உள்ளே ஒரு இயக்குநர் இருப்பதையும் உணர்ந்தேன். அதனால் தான் படங்களையும் இயக்கியுள்ளார். நிச்சயம் இந்த படம் மூலம் மக்களுக்கு நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள், அதனால் படமும் நல்ல வெற்றியை பெற வேண்டும்.” என்று பேசிய்வர், திடீரென்று மேடையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கியதால், பத்திரிகையாளர் கோபமடைந்து கூல் சுரேஷை எச்சரித்தனர்.
 
உடனே தனது தவறை உணர்ந்த நடிகர் கூல் சுரேஷ், நான் இப்படி பேசினால் ரசிகர்கள் ரசிக்கிறார்கள், என்று பேசினேன் ஆனால், இனி இப்படி பேச மாட்டேன், என்று கூறி மணிப்பு கேட்டார். அதேபோல் தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்களும், பொது மேடையில் இப்படி அநாரீகமாக பேசக் கூடாது, தம்பி உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார், இனி அப்படி பேச மாட்டார். நான் வண்ணாரப்பேட்டை காரன் தான், எனக்கும் இப்படி பேச தெரியும், ஆனால் பொது இடத்தில் அப்படி பேச மாட்டேன், இதே ஒரு பொரிக்கியிடம் பேச வேண்டிய சூழலில் இப்படி தான் பேசுவேன். இனி அவர் இப்படி பேச மாட்டார், அவரை மன்னித்து விடுங்கள், என்று பேசிய அனைவரையும் சமாதானப்படுத்தினார்.
 
பிறகு இசை குறுந்தகடு வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் கே.ராஜன் வெளியிட, வந்திருந்த விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக்கொண்டார்கள். இதையடுத்து, இயக்குநர் லியாகத் அலிகான், இயக்குநர் ஈ.ராமதாஸ், கலைப்புலி சேகரன், இயக்குநர் ராசி அழகப்பன், இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸாலி, இயக்குநர் விருமாண்டி, நடிகர்கள் முத்துக்காளை, கூல் சுரேஷ், ஏவிஎம் பிஆர்ஓ பெரு. துளசி பழனிவேல், பாடலாசிரியர் முருகன் மந்திரம் ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினார்கள்.
 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.