கணவனை இழந்து கருவாடு விற்று மகனைக் கல்லூரியில் படிக்க வைக்கும் அம்மா(விஜி சந்திரசேகர்). அம்மாவின் கஷ்டங்களைக் கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ளாத மகன் (படத்தின் நாயகன்), நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறான் படத்தின் டைட்டில்படி சீமத்துரையாக.
நாயகியை பார்த்ததும் அவனுக்குக் காதல் வருகிறது. அதுவும் ஊர் மணியக்காரர் வீட்டுப் பெண் மேல்.
காதல் விவகாரம் நாயகியின் வீட்டிற்கு தெரிய வர மோதல், அடிதடி, வெட்டுக்குத்து என்று போகும் என்று எண்ணி பார்த்தால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் க்ளைமாக்ஸ் காட்சி பதற வைக்கிறது.
நாயகன் கீதன், கிராமத்தில் சுற்றித்திரியும் கல்லூரி மாணவன் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். தன்னுடைய இயல்பான நடிப்பில் அசத்துகிறார்.
நாயகி வர்ஷா, அழகு.. கண்கள் ஒன்றே போதும் ஆயிரம் வசனங்களை பேச..
படத்திற்கு பலமாக நினைத்தால் அது நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜிசந்திரசேகர் தான். கருவாடு விற்கும் பெண்ணாக சிறப்பாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் கயல் வின்செண்ட், மகேந்திரன் தேநீர்க்கடைக்காரராக நடித்திருக்கும் பொரி உருண்டை சுரேஷ், நாயகியின் மாமாவாக நடித்திருக்கும் காசிராஜன், வாய் பேச முடியாதவராக நடித்திருக்கும் நிரஞ்சன் ஆகிய எல்லோருமே கதைக்கேற்ற கதாபாத்திரம் தான்.
திருஞானசம்பந்தம் ஒளிப்பதிவில் கிராமத்து அழகு சரியாகப் பதிவாகியிருக்கிறது. ஜோஸ்ப்ராங்க்ளின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் பின்னனி இசை கண்களில் கண்ணீரை வர வைக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ்தியாகராஜன், ஒரு அருமையான கிராமத்து வாழ்வியலை கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்.