அரசியலை மையமாக வைத்து இப்படி ஒரு வெப் சீரிஸ் தமிழில் வந்திருக்கிறதா என யோசிக்கத் தோன்றும் வகையில் அடி முதல் நுனிவரை சமகால அரசியலை நினைவு படுத்தும் வகையில் வந்திருக்கும் வெப் சீரிஸ்தான் செங்களம்.துவக்கமே அபாரமாக இருக்கிறது. கருவேலங்காட்டுப் பகுதியில் ஒரு பெண்மணி சாப்பாட்டு தூக்குடன் நடந்து வர, துணையாக வரும் நாயின் கழுத்திலும் ஒரு சாப்பாட்டு தூக்கு தொங்குகிறது. ஓரிடத்தில் நின்று அந்தப் பெண் குலவை சத்தமிட ஒளிந்திருக்கும் மூன்று இளைஞர்கள் வெளியே வருகின்றனர்.அந்தப் பெண்மணியின் மகன்கள்தான் அந்த மூவரும் என தெரிய வர, அவர்கள் ஒளிந்திருக்கும் காரணம் ப்ளாஷ் பேக் காட்சிகளாக விரிகிறது…
சுமார் நாற்பது ஆண்டுகாலம் விருதுநகர் நகராட்சித் தலைவர் பொறுப்பில் பரம்பரை பரம்பரையாக சரத் லோகித்ஸவா குடும்பம் ஆட்சி செய்கிறது. சிட்டிங் சேர்மனான அவரது மகன் பவன், விபத்தொன்றில் அகால மரணமடைய அந்த இடத்துக்கு யாரைக் கொண்டு வருவது என்ற அரசியல் களத்தை ரத்தகளமாக்கி செங்களமாக்கிக் கொடுத்திருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் எஸ்.ஆர்.பிரபாகரன்.சேர்மனாக இருந்து இறந்து போன மூத்த மகன் இடத்துக்கு யாரைக் கொண்டு வருவது என, செயல் பட முடியாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி (?) சரத் லோகித்ஸவா யோசிக்க, இரண்டாவது மகனான பிரேம் குமார் அரசியல் ஆர்வமின்றி விலகி நிற்கிறார்.
ஆனால் அந்த இடத்தை ஆக்ரமிக்க நினைக்கும் லோகித்ஸவாவின் மகள் பூஜா வைத்தியநாதன் சத்தமின்றி காய்களை நகர்த்தத் துவங்குகிறார்.ரத்த சம்மந்தமுள்ள நேரடி உறவு முறையைச் சேர்ந்த யாராவது ஒருவர்தான் சேர்மன் பொறுப்புக்கு வர வேண்டும் என சிலர் நினைப்பதற்கு மாறாக, இறந்துபோன பவன் மனைவி வாணி போஜன், அரசியல் சாணக்கியம் கொண்ட தன் தோழி ஷாலி நிவேகாஸ் உதவியுடன் வெற்றி வாகை சூடி சேர்மன் பொறுப்புக்கு வந்து விடுகிறார்.இதன் பிறகு விறுவிறுப்பான திருப்பங்களுடன் கதை ராக்கெட் வேகத்தில் பறக்கிறது. இறுதியில் சீசன் இரண்டுக்குரிய அட்டகாசமான முடிவுடன் நிறைவடைகிறது. சீசன் இரண்டு மட்டுமல்ல, சமகால அரசியலை வைத்து தொடர்ந்து எத்தனை வேண்டுமானால் நீடித்துக் கொண்டே போகலாம். காரணம் செங்களத்தின் கதைக் களம் அப்படி அமைந்திருக்கிறது.திரைப்படத்துக்கு இருக்கும் தணிக்கை வெப் சீரிஸ்க்கு கிடையாது என்பதால் குடும்பத்துடன் பார்க்க முடியாத கெட்ட வார்த்தைகளை வசனமாக வலிந்து திணிக்கும் சீரிஸ்களுக்கிடையில், வெப் சீரிஸ் தரும் கருத்து சுதந்தரத்தை மிக நன்றாகப் பயன்படுத்தி செங்களத்தை உருவாக்கியதற்காகவே இயக்குநர் பிரபாகரனை பாராட்டலாம்.
இந்தக் கதையை திரைப்படத்துக்கு ஏற்ற வகையில் உருவாக்கியிருந்தால், பல காட்சிகளில் கைத்தட்டல்களும், சில காட்சிகளில் கடும் கண்டனங்களும் எழும் என்பதை உணர்ந்து வெப் சீரிஸாக்கியிருக்கின்றனர்.நான் லீனியர் முறையில் கதை சொல்லப்பட்டாலும், பார்வையாளர்கள் குழப்பமடையாவண்ணம் தெளிவான படத்தொகுப்பைத் தந்த பிஜூ டான்போஸ்கோ பாராட்டுக்குரியவர்.திரைப்படத்தில்கூட கிடைத்திராத கணமான பாத்திரம் கிடைத்திருப்பதால் தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார் வாண் போஜன்.அவரது தோழி நாச்சியாராக வரும் ஷாலி நிவேகாஸ் வேடம் பார்வையாளர் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கலையரசன், விஜி சந்திரசேகர் போன்ற பிரதான பாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் மட்டுமின்றி பக்ஸ்,வேல ராமமூர்த்தி போன்ற சிறிய வேடங்களில் வருபவர்களும் நினைவில் நிற்கின்றனர்.கோடீஸ்வரரான வாணி போஜனின் தந்தை தன் மகளை இரண்டாம் தாரமாக நகராட்சி சேர்மனுக்கு ஏன் மணமுடிக்க வேண்டும் என்பதற்கான காரணம் படத்தில் வலுவாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது மிஸ்ஸிங் என்பது அடித்தளத்தையே ஆட்டும் மிக முக்கிய குறைபாடு.பெண் கல்வியின் முக்கியத்துவத்தை ஆழமாகவும் அழகாகவும் அயலி படத்தில் சொன்ன ஜி5 வெப் சீரிஸ், செங்களம் தொடரில் சமகால அரசியலை சமரசமின்றி விவரித்திருப்பது பாராட்டுக்குரியது.