வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில், பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்ட விரோத கருப்பு பணப் பரிமாற்றங்கள் செய்துள்ளனர்.
பெருமளவில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். ரகசிய வங்கி கணக்குகளில் டெபாசிட்டுகளும் செய்துள்ளனர்.
இது தொடர்பான ரகசிய ஆவணங்களை சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியிட்டு, உலக அரங்கை பரபரப்பாக்கியது. இந்த ஊழல் ‘பனாமா கேட் ஊழல்’ என அழைக்கப்படுகிறது.
1990-களில் நவாஸ் ஷெரீப் இரு முறை பிரதமர் பதவி வகித்தபோது, சட்டவிரோத பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டதாகவும், லண்டனில் 4 சொகுசு அடுக்கு மாடி குடியிருப்புகள் வாங்கியதாகவும் பனாமா ஆவணக் கசிவில் தகவல் வெளியானது.
‘பனாமா கேட்’ ஊழலில் நவாஸ் ஷெரீப் பதவியைப் பறிக்க வேண்டும்’ என்று கோரி, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான், வக்கீல் தாரிக் ஆசாத், ஜமாத் இ இஸ்லாமி (ஜி) தலைவர் சிராஜூல் ஹக், அவாமி முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் ரஷீத் அகமது ஆகிய 4 பேர் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கூட்டு விசாரணைக்குழு அமைத்து நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ‘பனாமா’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பின் (எப்.ஐ.ஏ.) கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தி, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 10-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கூறப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியபோது, அவர், “கூட்டு விசாரணைக்குழு அறிக்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் தொகுப்பு” என்று கூறி, பதவியை ராஜினாமா செய்ய மறுத்தார்.
கூட்டு விசாரணைக்குழு அறிக்கை மீது நீதிபதி இஜாஸ் அப்சல்கான் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை சென்ற 21-ந் தேதி முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாகக் கண்டு, அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நேற்று ஒரு மனதாக தீர்ப்பு அளித்தனர்.
பாகிஸ்தான் அரசியல் சாசனம் பிரிவு 62 மற்றும் 63-ன் அடிப்படையில், நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த பிரிவுகள் பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர் உண்மையும், நேர்மையும் கொண்டவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
நீதிபதி இஜாஸ் அப்சல்கான் வாசித்து அளித்த தீர்ப்பில்,
“* நவாஸ் ஷெரீப், பாராளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இருந்து தகுதி இழப்பு செய்யப்படுகிறார். உண்மையும், நேர்மையும் அற்ற அவர் பிரதமர் பதவியையும் இழக்கிறார்.
* நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து தேர்தல் கமிஷன் முறையான அறிவிக்கை வெளியிட வேண்டும்.
* நிதி மந்திரி இஷாக் தார் மற்றும் கேப்டன் முகமது சப்தார் எம்.பி. ஆகியோரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்படுகிறது.
* நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு விசாரணை நடத்த வேண்டும். இவர்களுக்கு எதிராக 6 வாரங்களில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கு விசாரணை, 6 மாதங்களில் முடிய வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக அரசியல் கட்சியினர் கோர்ட்டு வளாகத்தில் நிறைந்திருந்தனர். இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, நவாஸ் ஷெரீப், பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
67 வயதான நவாஸ் ஷெரீப், இப்படி பிரதமர் பதவியைப் பாதியிலேயே துறப்பது இது 3-வது முறை ஆகும். இவர் இதுவரை ஒரு போதும் தனது பிரதமர் பதவி காலத்தை நிறைவு செய்தது இல்லை.
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் மட்டுமல்ல, இதுவரை எந்த பிரதமரும் தங்களது பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்தது கிடையாது. ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி விடும்; பிரதமர் பதவியை சொந்தக்கட்சியே பறித்துவிடும்; நீதித்துறை நடவடிக்கையால் பதவி பறிபோகும்; வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வேண்டியது வந்து விடும்; எல்லாவற்றையும் கடந்து கொல்லப்பட்டு விடுவதும் நடந்திருக்கிறது.
அந்த வகையில் தற்போது நீதித்துறை நடவடிக்கையால் நவாஸ் ஷெரீப் பதவி பறி போய் உள்ளது. 70 ஆண்டு கால பாகிஸ்தான் வரலாற்றில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் பதவி பறிபோன 2-வது பிரதமர் நவாஸ் ஷெரீப். 2012-ம் ஆண்டு பிரதமராக இருந்த யூசுப் ராஸா கிலானி, அப்போதைய அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த மறுத்ததால், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின்கீழ் பதவி பறிப்புக்கு ஆளானார் என்பது நினைவு கூறத்தக்கது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் நவாஸ் ஷெரீப் பதவி பறிக்கப்பட்டிருப்பதை பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “பாகிஸ்தான் இன்று (நேற்று) வெற்றி பெற்றிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, பாகிஸ்தானில் புதிய சகாப்தம் தொடங்குவதைக் காட்டி உள்ளது. நீதிதான் எல்லாவற்றிலும் உயர்ந்தது.” என்று கூறினார்.
பிற எதிர்க்கட்சியினரும் நவாஸ் ஷெரீப் பதவி பறிப்பை ஆடிப்பாடியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
பதவி விலகியுள்ள நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், பஞ்சாப் மாகாண முதல்- மந்திரியுமான ஷாபாஸ் ஷெரீப் (வயது 65), புதிய பிரதமர் ஆகிறார். இதற்கான முடிவை கட்சி மேலிடம் எடுத்துள்ளது.
ஆனால் அவர் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இல்லை என்பதால் உடனடியாக பிரதமர் பதவி ஏற்க முடியாது. அவர் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக வேண்டும். அதற்கு 45 நாட்கள் ஆகும் என சொல்லப்படுகிறது.
அதுவரையில் இடைக்கால பிரதமராக ராணுவ மந்திரி கவாஜா ஆசிப், பெட்ரோலிய மந்திரி ஷாகித் ககான் அப்பாசி ஆகிய இருவரில் ஒருவர் பதவி ஏற்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.