full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மீண்டும் இணையும் சிபி சத்யராஜ் மற்றும் தரணிதரன்!

 
கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் எந்த ஒரு நடிகருக்கும் அது ஒரு ‘பாதுகாப்பான பந்தயம்’ என்பதை தாண்டி, ‘வலுவான பந்தயம்’ என்று சொல்லலாம். அந்த வகையில், நடிகர் சிபி சத்யராஜ் ஒவ்வொரு படத்திலும் வெற்றியை பெற்று வருகிறார். அவரது முந்தைய படங்கள் இதை நிரூபித்திருக்கின்றன. அடுத்து வெளிவர இருக்கும் ‘மாயோன்’ உட்பட அனைத்து படங்களும் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி உள்ளன. ஆர்வத்தை தூண்டும் கதையில் உருவாகியுள்ள அவரது ரங்கா படம் அடுத்து வெளிவர இருக்கும் நிலையில், சிபிராஜ் அவருக்கு மிகவும் பிடித்த இயக்குனரான தரணிதரன் உடன் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார். இந்த படத்தில் சிபிராஜ் காட்டிலாகா அதிகாரியாக நடிக்கிறார். தற்காலிகமாக ‘தயாரிப்பு எண் 4’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை MG ஆரா சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் காவ்யா மகேஷ் தயாரிக்கிறார்.
 
இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர் காவ்யா மகேஷ் கூறும்போது, “சில நேரங்களில், ஒரு நடிகரை முடிவு செய்வதற்கான செயல்முறை எளிதானது, ஆனால் ஒரு இயக்குனரை கண்டுபிடிப்பது கஷ்டம். அதே மாதிரி சில நேரங்களில் இயக்குனரை முடிவு செய்வது எளிது, நடிகரை இறுதி செய்வது கடினம். ஆனால் சிபி சத்யராஜ் சார் மற்றும் தரணிதரன் சார் ஆகிய இருவருமே சேர்ந்தும், தனியாகவும் தங்களை நிரூபித்திருக்கிறார்கள். தற்போது எங்கள் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் மீண்டும் இருவரும் ஒன்றாக இணைந்திருப்பது பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. கூடுதலாக, அனைத்து வயதினரும் தொடர்புபடுத்தி கொள்ளும் வகையில் கதை அமைந்திருக்கிறது. எளிமையாக சொல்வதென்றால், பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட, தற்போதைய சூழ்நிலையுடன் தொடர்புடைய ஒரு படம்” என்றார்.
 
நடிகர் சிபி சத்யராஜ் கூறும்போது, “இந்த கதையின் மையக்கரு உடனடியாக என்னை ஈர்த்தது. என்ன ஆனாலும் தவற விடக்கூடாது என நினைக்கும் வகையில் ஒரு சில கதைகள் நமக்கு அமையும். தரணிதரன் சார், ‘எல்லோருக்கும் விருந்து’ என நான் நம்பும் வகையில் ஒரு கதையுடன் வந்தார். இதற்கு மேல் கதையை பற்றிய விஷயங்களை நான் சொல்ல முடியாது. நான் ஒரு காட்டிலாகாஅதிகாரியாக நடிக்கிறேன். புலி ஒன்று படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இருக்கும்” என்றார்.
 
இயக்குனர் தரணிதரன் கூறும்போது, “ஒவ்வொரு படத்திலும், சிபி சார் தனித்துவமான கதாபாத்திரங்கள் மூலம் தன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். முன்னதாக நாங்கள் ஒரு படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றியிருக்கிறோம். என்றாலும் இந்த கதையை அவர் ஒப்புக் கொள்வாரா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஏனெனில் அவர் நிறைய படங்களை கையில் வைத்திருந்தார். இருப்பினும், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவரை விட யாரையும் என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. இந்த கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாக இருந்தார். தயாரிப்பாளர் காவ்யா மகேஷ் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்து வருகிறோம். விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம்” என்றார்.