டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் நிர்பயாவை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர்கள் 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமும் அவர்களது மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தள பக்கங்களில் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சித்தார்த்தும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, ‘திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்னதாக தேசியகீதத்தை இசைப்பதை காட்டிலும் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்பதை காட்டுவதே அதிக தேசப்பற்று உடையதாக இருக்கும் என நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.