“அவர் இல்லாத குற்றச்சாட்டுகளே இல்லை” என்ரு சொல்லுமளவிற்கு அதிகப்படியான சர்ச்சைகளில் சிக்கிக் கொள்பவர் நடிகர் சிலம்பரசன். “ட்ரிபிள் ஏ” படத்திற்கு சிம்புவினால் ஏற்பட்ட நஷ்டத்திர்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்த புகாரின் அடிப்படையில், அவருக்கு தடை விதிக்கப்படலாம் எனவும் பேசப்பட்டது.
நிலைமை அப்படி இருந்த போதுதான், மணிரத்னம் இயக்கும் “செக்கச்சிவந்த வானம்” படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் சிம்பு. அப்போது கூட “பாவம்யா மணிரத்னம், சிம்புவை வச்சிட்டு என்ன பாடுபட போறாரோ?” என்று தான் விமர்சனம் செய்தார்கள்.
ஆனால், “செக்கச்சிவந்த வானம்” படக்குழுவினர் சிம்புவின் நடவடிக்கைகளைப் பார்த்து அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்திருக்கிறார்கள். காரணம், “காலையில் படப்பிடிப்பு என்றால் மாலையில் தான் வருவார். திடீர் என்று படப்பிடிப்பை ரத்து செய்வார்” என்று எல்லாம் சிம்புவை குறை சொன்ன நிலையில் சிம்பு அதர்கு நேரெதிராக நடந்து கொள்வது தான்.
இதுகுறித்து நடிகர் அரவிந்த் சாமி சமீபத்தில் கூறியது யாதெனில்,
“அவரைப் பற்றி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவரின் மற்ற படங்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இந்தப் படத்துக்கு அவர் மிகவும் ஒழுக்கமாக இருக்கிறார். எங்கள் எல்லோருக்கும் முன்பே வந்து அமர்ந்திருப்பார். காலையில் ஆறு மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 5.40க்கு செல்வேன். ஆனால் அவர் ஐந்து மணிக்கே வந்து உட்கார்ந்துவிடுவார்” என்று கூறி இருக்கிறார்.
இந்த செய்தி சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் நடந்த “எழுமின்” பட விழாவில் சிம்பு பேசும் போது, “இனி படப்பிடிப்பு தளத்துக்கு தாமதமாக வரமாட்டேன் என உறுதி அளிக்கிறேன்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.