full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சிம்பு பேசிய பேச்சில் அசந்துபோன பத்திரிக்கையாளர்கள்!!


அரசியல் விவகாரங்களைப் பொறுத்த வரை சினிமாவில் பேசுவது போல் உணர்ச்சி மிகு வசனங்களைக் கொண்டு இட்டு நிரப்பிவிட முடியாது. பிரச்சனைகளுக்கான காரணங்கள், அது சந்தித்து கடந்து வந்த இடர்களின் வரலாறு, சரியான நிலைப்பாடு இவைகளை எல்லாம் அறிந்து கொண்டு பேசுவதே சரியான அணுகுமுறையாகவும், அறிவு சார்ந்ததாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்க முடியும்.

ஆனால் காவிரி விவகாரத்தில் நடிகர்கள் அடிக்கிற ஸ்டண்டை எல்லாம் பார்க்கும் போது, “எப்பா சாமி, இவங்களுக்கு அரசியல்வாதிகளே மேல்” என்றே தோன்றுகிறது.

தமிழ்நாட்டின் மாபெரும் உரிமைப் பிரச்சினையாக பார்க்கப்படுகிற காவிரி விவகாரமானது இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால நீண்ட நெடிய சட்டப்போராட்டத்தின் விளைவாக, “காவிரி மேலாண்மை வாரியம்” 6 வாரங்களில் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசோ, 6 வாரங்களையும் அமைதியாக கடத்திவிட்டு கடைசி நேரத்தில் கர்நாடக தேர்தலைக் காரணம் காட்டி 3 மாத கால அவகாசம் கேட்டு ஏமாற்றியது.

அதன் பிறகு தான் தமிழகமே போராட்ட களமானது. தமிழக அரசின் சார்பில் உண்ணாவிரதம், எதிர்க்கட்ட்சிகளின் சார்பில் கடையடைப்பு மற்றும் ரயில் மரியல் போராட்டம் என பரபரப்பானது. இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் இன்று வரை உறுதியாக போராடிக் கொண்இருக்கின்றன. இந்த போராட்டங்கள் எல்லாம் அரசியல் நோக்கங்களைக் கொண்டது என்றாலும், அவர்களது போராட்டங்கள் எல்லாம் இந்த காலகட்டத்திற்கு அவசியமானதாக இருக்கிறது.

இதற்கிடையில் தான் தமிழ் நடிகர்கள் “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்கக் கோரி அறவழிப் போராட்டம் நடந்தது. “மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டது” போல பட்டும் படாமால் பேசி விட்டு மதியம் ஒரு மணியோடு எல்லோரும் கலைந்து போனார்கள்.

இதில் உச்சகட்டம் எது எனில், நடிகர் சிம்பு தனியாக பிரஸ் மீட் கொடுத்தது தான். என்ன பேசுகிறோம் என்று தெரிந்து தான் பேசுகிறாரா? என்று அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் முதற்கொண்டு குழம்பிப் போனார்கள். “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்திடம் ஏன் கேட்க வேண்டும்?, மத்திய அரசிடம் ஏன் கேட்க வேண்டும்? கர்நாடகத் தாய்மார்களிடம் பிச்சை கேட்போம்”, என்று போட்டாரே ஒரு போடு அசந்து போனார்கள் அத்தனை பேரும்.

“காவிரி மேலாண்மை வாரியம்” அமைப்பதற்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோணி உதவி செய்ய வேண்டும்” என சொன்ன போது யார் முகத்திலும் ஈ ஆடவில்லை. ஆனால் அங்கிருந்த அவரது ரசிகர்களோ கைதட்டி, விசிலடைத்து ஆர்ப்பரித்தார்கள்.

சிம்பு பேசியதை முழுமையாக கேட்ட பிறகு ஒன்றே ஒன்று தான் தோன்றியது, மற்ற நடிகர்கள் எல்லோரும் எதுவுமே பேசாமல் வெறும் மௌன போராட்டத்தோடு கலைந்து சென்றது எவ்வளவோ மேலானது என்றே நினைக்கத் தோன்றியது.