மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக பிரச்சாரம் செய்யப்படுகிற, எதிர்க்கட்சிகள் எல்லாம் இந்திய வரலாற்றில் மக்கள் மீதான மிக மோசமான நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டுகிற “பணமதிப்பிழப்பு” திட்டம் செயல்படுத்தப்பட்டு கடந்த எட்டாம் தேதியோடு ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்டது. இந்த நாளை எதிர்க் கட்சிகள் எல்லாம் கருப்பு நாளாக அனுசரித்தன.
இந்நிலையில் அந்த நாளில் “தட்றோம் தூக்குறோம்” படக்குழுவினர் வெளியிட்டுள்ள “டிமானிட்டைஷேசன் ஆந்தம்” பாடலுக்கு தமிழக பாஜக கண்டனங்களையும், எதிர்ப்பையும் கிளப்பி வருகிறது.
பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து எழுதி, நடிகர் சிம்பு பாடிய அந்த பாடல் “நோ கேஸ்” எனத் தொடங்குகிறது அந்த பாடல்.
அதில்,
“கார்டை ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்.
கேள்வி கேட்காம கொண்டாடலாம்,
பண்ட பரிமாற்றம் பழகிக்கலாம்,
கண்ணே திறக்காம படம் பார்க்கலாம்,
டீமானிடைசேஸன்
மாறுமா நம்ம நேஷன்
கேள்வி கேட்டா போலீஸ் ஸ்டேஷன்,
இது கோலுமாலு குளோபலைசேஷன்!” என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பகடி செய்கிறது.
இதன் காரணமாக பாஜகவினர் சிம்புவின் வீட்டிற்கு முன் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சிம்புவின் வீட்டிற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக பாஜகவினர் மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி வசனங்களுக்கும் கடுமையான பிரச்சனைகளை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.