தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி பலத்த எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் தொடங்கியது. 15 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் வசிக்க வேண்டும் போன்ற கண்டிஷன்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொரு போட்டியாளர்களாக நீக்கப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் 10 போட்டியாளர்களே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.
இந்நிலையில், பரணியை வெளியேற்ற தூண்டியது போன்று தற்போது ‘பிக்பாஸ்’ குடும்பத்தினர் அடுத்த டார்கெட்டாக ஓவியா குறி வைத்துள்ளனர். ஓவியா இங்கே இருந்தால் நாங்கள் வீட்டில் இருக்க மாட்டோம், ஒரு வேலையும் செய்ய மாட்டோம் என்று போர்க்கொடி தூக்குவது போல் புரமோக்களும் வெளியிடப்பட்டன.
ஓவியா மீது கொடுத்த வேலையை செய்வது இல்லை, மற்றவர்களுடன் ஒட்டுதல் இல்லை, எல்லாவற்றுக்கும் மேலாக யார் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார், தன் மீது கவனம் ஏற்பட இப்படி நடந்து கொள்கிறார் என்று மற்றவர்கள் கூறுகின்றனர்.
இதைத் தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஒளிபரப்பிய 26-வது நாள் நிகழ்விலும் ஓவியாவுக்கும் காயத்ரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இரவில் ஓவியாவை தூங்க விடாமல் காயத்ரி, ஜூலி, நமீதா ஆகியோர் பாடல் பாடுவது போன்ற காட்சிகள் காண்பிக்கப்பட்டன.
மேலும் அவரை மற்ற விஷயங்களில் கலந்து கொள்ள விடாமல் தனிமைப்படுத்தி இருப்பது போன்ற காட்சிகளும் காண்பிக்கப்பட்டன. இதனிடையே ஓவியா செய்வது சரிதான். அவர் தன் மனதுக்கு தோன்றியதை சொல்கிறார், செய்கிறார். அதை விடுத்து அவர் நல்ல பெயர் எடுப்பதற்காக எதுவும் செய்யவில்லை என்று கூறி ஏராளமானோர் அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும் ஓவியாவை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறாமல் காப்பற்ற வேண்டும் என்று ஒரு ரசிகர்கள் கூட்டம் கூறி வருகின்றனர். தொடர்ந்து #SaveOviya என்ற ஹேஷ்டாக்கில் டிரெண்டாக்கினர். மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் ஓவியா நிஜமாக அப்படித்தான் இருப்பார் என்றும் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சிம்பு ஓவியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:
ஒருவர் மற்றவரைவிட வித்தியாசமாக இருந்தால் அவர்கள் போக்கில் விட்டுவிட வேண்டும். அதைவிடுத்து குறை கூறுவதும், கார்னர் செய்வதும் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.