


ஒரு சில குறிப்பிட்ட வகையான படங்கள் தணிக்கை சான்றிதழ்களை பொறுத்து அனைத்து தரப்பு ரசிகர்களும் அந்த படத்தை பார்க்கும் வாய்ப்பை இழக்கும். குறிப்பாக தமிழ் ஈழத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் போர்க்கள் காட்சிகள், இரத்தக்களரி, அழுத்தமான வசனங்கள் ஆகியவற்றை கொண்டிருப்பதால் அந்த காட்சிகளை வெட்டி எறிய மற்றும் வசனங்கள் ஒலியிழப்பு செய்ய தணிக்கை குழு வலியுறுத்தும். இருப்பினும், “சினம் கொள்” அந்த மாயையை உடைத்து, ‘யு’ சான்றிதழை பெற்று ஒரு முன்னோடியாக மாறியிருக்கிறது. கனடாவில் பிறந்து வளர்ந்த ரஞ்சித் ஜோசஃப் தணிக்கை குழுவில் ‘யு’ சான்று கிடைத்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார். மேலும் சிங்கள தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதால் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளார்.


“இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களில் முற்றிலும் படம்பிடிக்க நாங்கள் முடிவு செய்தோம். அப்போது தான் ரசிகர்கள் அந்த தளத்திற்கு நெருக்கமாக அனுபவத்தை உணர முடியும் என நினைத்தோம்” எனக்கூறும் இயக்குனர் ரஞ்சித் ஜோசஃப் இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்து கொள்கிறார். 78 பேர் கொண்ட மொத்த படக்குழுவும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு பயணித்திருந்தது. உண்மையில், சில தொழில்நுட்ப கலைஞர்கள் சிங்களர்களாக இருந்தனர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர். இத்தகைய விஷயங்கள் இந்த படத்திற்கு ஒரு உண்மையான வரம்” என்றார்.
ஐரோப்பா, கனடா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் வாழும் இலங்கை தமிழர்கள் இந்த படத்துக்கு நிதி அளித்துள்ளனர். தேசிய விருதுக்கான பரிந்துரைக்காக இந்த படம் அனுப்பப்பட்டுள்ள இந்த படம் ஜூலை மாதம் வெளியாக இருப்பதாக தெரிவிக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜோசஃப்.
படத்தின் களத்தை பற்றி இயக்குனர் ரஞ்சித் கூறும்போது, “போருக்குப் பிறகான தசாப்தத்தில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. 6 வருடங்கள் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் ஒரு நபர் (ஆண்டவன் கட்டளை புகழ் அரவிந்தன்), அவரது வீடு இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதை காண்கிறார். மேலும் அவரது குடும்பத்தினர் காணாமல் போயிருக்கிறார்கள். இந்த சினம் கொள் திரைப்படம் தமிழர்கள் எதிர்கொள்ளும் சில கடினமான, யதார்த்தமான விஷயங்களையும் பேசியிருக்கிறது என்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜோசஃப்.