full screen background image
Search
Saturday 23 November 2024
  • :
  • :
Latest Update

“ சிந்துபாத் “ படத்தின் பாடல்களை விநியோகஸ்தர்கள் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக்பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில் , S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இவ்விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் கே.ராஜராஜன், தயாரிப்பாளர் ஷான் சுதர்சன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் கிளாப் போர்டு சத்தியமூர்த்தி, விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் செல்வின் ராஜ்,விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் ராஜமன்னார், விநியோகஸ்தர்கள் சங்க பொருளாளர் மணிகண்டன், பைனான்சியர் மோகன் குமார், கலை இயக்குனர் மூர்த்தி, படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,  படத்தின் இயக்குனர் அருண்குமார், மியூசிக் 7 நிறுவன பிரதிநிதி நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் ராஜராஜன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.அவர் பேசுகையில்,“

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த சிந்துபாத்தின் பயணம் தொடங்கியது. இதனை இயக்குனர் அருண்குமார் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து எங்கள் குழு மீது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முழு நம்பிக்கை வைத்தார். அதனை அனைவரின் ஒத்துழைப்புடன் காப்பாற்றி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாக்கி இருக்கிறோம்.விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே மிகவும் கடினமாக உழைத்த படம் இது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவர் கடினமாக உழைத்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதனையடுத்து படத்திற்கு மற்றொரு தூணாக இருப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இது மிகப்பெரிய படம். அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.


இயக்குனர் அருண்குமார் பேசுகையில்,“

முதலில் இந்த கதையை பல முன்னணி நாயகர்களிடம் சொன்னேன். அவர்கள் யாரும் நடிப்பதற்கு முன் வரவில்லை. இந்நிலையில் மீண்டும் என்னை விஜய் சேதுபதி அழைத்து நாமே இணைந்து பணியாற்றுவோம் எனறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளர் ஒரே ஒரு முறை மட்டுமே கதையை கேட்டார். அதன் பிறகு குறுக்கிடவே இல்லை. கதைக்கு என்ன தேவையோ அதை வழங்கிக் கொண்டிருந்தார். நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் வேகமாக இயங்குவதற்கு முழுமையான காரணம் அவர்தான். நான் யுவன்சங்கர்ராஜாவின் மிகப்பெரிய ரசிகன். அவருடன் இணைந்து பணியாற்ற முதலில் தயங்கினேன். அவர் நமக்கு சௌகரியமாக இருப்பாரா?என்றும் எண்ணினேன். ஆனால் அவர் நான் நினைத்ததை விட மிக எளிமையாகப் பழகினார். திரைக்கதைக்கு என்ன தேவையோ அதை அளித்தார். அதன்பிறகு நடிகை அஞ்சலி. கதை முழுவதும் அவரை சுற்றி தான் நடக்கிறது. அவர்களும் அதை உணர்ந்து நன்றாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். பா விஜய், கார்த்திக் நேதா, விவேக் ஆகியோர் பாடல்களை எழுதி இருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா விஜய் சேதுபதி படம் முழுவதும் வரக்கூடிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த கதையை யோசிக்கும்போதே இந்த கேரக்டரில் சூர்யா தான் நடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். அதை விஜய் சேதுபதியிடமே சொல்லியிருந்தேன். அவரும் நன்றாக நடித்திருக்கிறார் என்றார்.

 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசுகையில்,“

பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அருண் உடனான அறிமுகம் நட்பாக மாறியது. அதன் பிறகு அவர் எனக்கு சௌகரியமான நண்பராக மாறினார். பிறகு அவரிடம், என்னைத் தவிர்த்து வேறு நடிகர்களை வைத்து இயக்குவதற்கு முயற்சி செய் என்று அறிவுரை கூறினேன். ஆனால் திரையுலகில் யாரும் அவரை நம்பவில்லை. பிறகு நானே அழைத்து ‘சேதுபதி’ பட வாய்ப்பை கொடுத்தேன். அதன் பிறகு நானே சில முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்லுமாறு வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தேன். ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக அந்த முயற்சியும் நடைபெறவில்லை. பிறகு மீண்டும் அவரை அழைத்து இந்த பட வாய்ப்பினை அளித்தேன். தற்போதும் இந்த படம் ஹிட் ஆன பிறகு வெளியில் சென்று வேறு இயக்குனர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அருணின் தனி சிறப்பு என்னவென்றால் நாயகனை மிக மிக நல்லவனாகவும், நாயகியை கண்ணியமானவளாகவும், அழகுணர்ச்சி மிக்கவளாகவும், இயல்பானவளாகவும் வடிவமைப்பார். அதேபோல் வாழ்க்கையில் இடம் பெறக்கூடிய சின்ன சின்ன அழகான சம்பவங்களை ரசித்து, அதனை நேர்த்தியாக காட்சிப்படுத்த கூடிய திறமைசாலியும் கூட.  அழகை நன்றாக ரசிக்கக் கூடியவர். சினிமாவில் தொடங்கிய அவருடைய நட்பு, பிறகு என்னுடைய குடும்ப நண்பரானார். அதனால் தான் என்னுடைய மகன் சூர்யாவை இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நான் நடிக்கிறோனோ இல்லையோ சூர்யா நடிப்பது உறுதி என்று இந்த படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அருண் என்னிடம் கூறியிருந்தார்.
சிந்துபாத் நமக்கு எல்லோருக்கும் நன்கு தெரிந்த அறிமுகமான கணவன் மனைவி பற்றிய எமோஷனல் படம். இதில் ஏராளமான சுவராசியமான காரணிகள் இருக்கிறது. அதனை விவரித்தால் அதுவே நாளை தலைப்பு செய்தியாகிவிடும். அதனால் அதை கடந்து விடுகிறேன். ஒருவனுடைய மனைவியை, ஒரு கும்பல் கடத்தி சென்று, கடல் கடந்து ஒரிடத்தில் சிறை வைத்திருக்கிறது. அந்த மனைவியை கணவனானவன் கஷ்டப்பட்டு, போராடி எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.
இந்த படத்தில் அஞ்சலி, விவேக் பிரசன்னா, லிங்கா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கிறது. இவர்கள் கதையின் தூண்களும் கூட. படத்தில் நாயகனுக்கு காது சற்று மந்தம். உரத்துப் பேசினால் தான் கேட்கும். இது ஒரு சுவாரசியமான அம்சம். நடிகை அஞ்சலி இயல்பாகவே சத்தமாக பேசக்கூடிய கேரக்டர் . அவர்கள் இந்த கேரக்டரில்  பொருத்தமாக நடித்திருந்தார். அவரைத் தவிர வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்தில் சிந்திக்க முடியவில்லை.


இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் லிங்கா. நல்ல பையன். சற்று படபடப்பாகவும் பதற்றமாக இருப்பார். ஆனால் நல்ல நடிகன். தன்னுடைய வேலையை மிகச் சரியாக நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்று எண்ணக் கூடியவர். மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதை எனக்கு அனுப்பி, இவர்கள் என்ன செய்யலாம்? என்று கேட்பார். அவருக்கு நான் கோபப்படாதே நாம் வருத்தம் மட்டும் தான் பட முடியும். அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள்தான் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நாம் வருத்தம் மட்டுமே பட முடியும். மக்களுடைய வாழ்க்கை அழகாக இருக்க வேண்டும் என்று அவர்களின் அணுக்கமாக இருந்து நினைக்கக் கூடிய நல்ல உள்ளம் படைத்தவன். அவர் எதிர்காலத்தில் என்னைவிட சிறந்த நடிகராக வளரக் கூடும் என்று நம்புகிறேன்.
விவேக் பிரசன்னா  ரொம்ப சின்சியரான நடிகர். தன்னை சுற்றி இருப்பவர்களை எளிதாக கிரகிக்கக்கூடியவர். இந்த படத்தில் 23 வயதுடைய பெண்ணுக்கு தந்தையாக அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறார் .அவரால் மட்டுமே இதுபோல் வித்தியாசமாக நடிக்க முடியும். மேயாத மான் படத்தில் 25 வயது நாயகனுக்கு நண்பனாகவும் நடிக்க முடிகிறது.
படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் கிளைமாக்ஸ் போலிருக்கும். ஏனென்றால் தொடர்ந்து சேசிங் இருக்கும். யுவனைப் பற்றி நான் சொல்லி எதுவும் ஆகப்போவதில்லை. நான் மிகவும் ரசிக்கும் ஆளுமை யுவன் சங்கர் ராஜா. அவருடைய இசை தன்மையாக இருக்கும். மனதிற்கு நெருக்கமாக இருக்கும். எந்த சூழலிலும் இடையூறு ஏற்படுத்தாத, நம்பகத்தன்மை மிக்க மிக்கதாக இருக்கும். அவருடைய இசையை கேட்கும்போது, நம்முடைய இசை கேட்பது போல் இருக்கும். ராஜா சார் இசை மீது இருக்கும் ஈர்ப்பு போல, இவருடைய இசை மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது என்றார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில்,“

இயக்குனர் அருண் உடன் பணியாற்றும் போது ஒவ்வொரு பாடல்களையும் ஒரு எமோஷனை கனெக்ட் செய்திருப்பார். அது ரசிகனாக பார்க்கும்போது நன்றாக இருக்கும். இந்த படத்தின் பின்னணி இசையை நான் மிகவும் அனுபவித்து  பணியாற்றினேன். எல்லா பாடல்களும் ரசித்து உருவாக்கியவை. என்னுடைய டுவிட்டரில் கூட அன்மையில் நான் இசையமைத்த படத்தில் சிந்துபாத் படத்தின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை என்று டூவிட் செய்திருந்தேன். சில ஆல்பங்களில் பணியாற்றும் போது நம்மையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு இருக்கும்.

படத்தின் இரண்டாம் பகுதியில் விஜய் சேதுபதி ஓடிக் கொண்டே இருப்பார். பாங்காக்கில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கி கொண்டிருக்கும்போது படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று இருந்தேன். அப்பொழுது சண்டைக் காட்சிக்காக விஜய் சேதுபதி தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதை நேரில் கண்டு அசந்து போனேன். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள். கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்கள் வரும் அந்த காட்சியை எடுப்பதற்கு மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அதற்காக பின்னணி இசைக்கும் போது நான் வியந்து, ரசித்து, அனுபவித்து பணியாற்றினேன். சேதுபதியுடன் மகன் சூர்யா விஜய் சேதுபதி. அவர்தான் இந்தப் படத்தின் ராக்ஸ்டார் .

எல்லாவற்றுக்கும் இறைவன் ஒரு நேரத்தை ஒதுக்கி இருப்பார். அதேபோல் சிந்துபாத் படத்திற்கு இறைவன் இந்த தேதியை ஒதுக்கியிருக்கிறார். நாம் எவ்வளவு விரைவாக பணியாற்றினாலும் அல்லது எவ்வளவு மெதுவாக பணியாற்றினாலும் ஒரு பணி எப்போதும் முடிவுக்கு வர வேண்டும் என்று இறைவன் நினைக்கிறானோ அப்போதுதான் அந்தப் பணி  முடிவடையும். இந்த வகையில் உங்களை இந்த மாதம் சந்திக்கவிருக்கும் சிந்துபாத் படத்தை  திரையரங்கில் பார்த்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
இதனைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் படத்தின் ஆடியோவை வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.