full screen background image
Search
Friday 18 October 2024
  • :
  • :
Latest Update

சார் – திரைவிமர்சனம்

சார் – திரைவிமர்சனம்

 

சார் திரைப்படம் ஒரு முக்கியமான சமுதாய கருத்தை முன் எடுத்து வந்து இருக்கு கதைக்களம் ஏற்கனவே பார்க்கப்பட்ட களம் என்றாலும் திரை கதை முற்றிலும் புதுமையான வித்தியாசமான களம் கல்வியை ஆதிக்க சாதியினர் எப்படி முடக்கி வைத்தனர் என்பதை மிக அழகா சொல்லி இருக்கார் இயக்குனர் போஸ் வெங்கட்

தாழ்த்தப்பட்ட மக்கள், படித்துவிட்டால், அவர்களை அடக்கி ஆள முடியாது என்று, அவர்களுக்கு கல்வி கிடைப்பதை தொடர்ந்து தடை செய்து வருகிறது ஆதிக்க சாதி குடும்பம் ஒன்று. இதை எதிர்த்து, முயற்சி எடுத்து அரசுப் பள்ளியைக் கொண்டு வந்து அனைவருக்கும் கல்வி கிடைக்க வழி செய்கிறார் நல்லாசிரியர் ஒருவர். இது அங்கிருக்கும் ஆதிக்க சாதியினருக்குப் பிடிக்கவில்லை. அந்த நல்லாசிரியருக்கு மனநோயாளி என்று முத்திரை குத்தி ஒடுக்கிவைக்கிறார்கள்.

இது மூன்றாம் தலைமுறையிலும் தொடர்கிறது. தாத்தா, அப்பாவின் வழியில் ஆசிரியர் ஞானம் வருகிறார். அப்போதும் பள்ளியை இடிக்க ஆதிக்க சாதியினர் திட்டமிடுகின்றனர். எதிர்த்துப் போராடுகிறார்.

இவருக்கும் மனநலம் சரியில்லை என்று முத்திரை குத்துகிறார்கள். இதற்கிடையே ஊர்க்குளத்தில் அவ்வப்போது பிணங்கள் மிதக்கின்றன.

இறுதியில் என்ன ஆனது என்பதே கதை

நடிகர் விமல் ‘ஞானம்’ என்கிற ஆசிரியராக வருகிறார் … ஆரம்பத்தில் ஜாலியான இளைஞனாக வருகிறார். எட்டு மணி வரை தூங்கும் அவர், காதலியைச் சந்திக்க நான்கு மணிக்கு குளத்துக்குச் சென்று குளித்து.. அதனால் ஜூரம் வந்து நடுங்கும் காட்சியில் சிரிக்க வைக்கிறார்.நகைசுவையிலும் சரி சாதிக்க போராடும் இளைஞனாகவும் நடிப்பில் மிளிர்கிறார்.

‘யாரோ அடிக்கிறாங்க…’ என்று கதறும் இடத்திலும், ஆக்ரோசமான இறுதி காட்சியிலும் கூடுதலாக கவனம் ஈர்க்கிறார்.

நடிகர் சரவணன் மிக சிறந்த நடிகர் என்பது நாம் அறிந்த விஷயம் ஆனால் இந்த படத்தில் தான் ஒரு மிக சிறந்த நடிகர் என்று நிரூபித்து இருக்கிறார்.ஆசிரியர் பணியை அர்ப்பணிப்புடன் செய்வது, தன்னைப்போலவே மகனும் நல்லாசிரியராக இருந்து பள்ளியைக் காக்க வேண்டும், அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்று விரும்புவது, ஓய்வு பெற்றதை மறந்து பள்ளிக்குச் செல்வது, எதிரிகளின் சதியில் சிக்கி உயிர் தப்பி, தன்னைத்தானே சங்கிலியால் கட்டிக்கொண்டு முடங்குவது… கலங்க வைத்து விடுகிறார் ‘சித்தப்பு’ சரவணன். இல்லை… இனி, ‘சார்’ சரவணன். ஓய்வு பெற்ற பிறகும் ஞாபக மறதியில பள்ளிக்கு வரும் சரவணன் கவனம் ஈர்க்கிறார்.

நாயகி சாரதா தேவிக்கு அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை. கிடைத்த காட்சிகளில் இயல்பாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.விமலின் சேட்டைகளை மறைமுகமாக ரசிக்கும் காட்சியில் கவர்கிறார்.. வில்லனிடம் சிக்கும் காட்சியில் பரிதாபப்பட வைக்கிறார்.

சிராஜூவின் பாத்திரப்படைப்பு சிறப்பு. அதை உணர்ந்து நடிக்க முயற்சித்து இருக்கிறார். நட்பு முகம் காட்டி, பிறகு உண்மை சொரூபத்தை வெளிப்படுத்தும் காட்சியில் அதிர வைக்கிறார். நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகர் என்று வளம் வருவார்.

ஜெயபாலன், எலிசபெத் உள்ளிட்டோர் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

கிராமம், பள்ளி என சில லோகேசன்கள்தான்.தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை, அயர்ச்சி ஏற்படுத்தாமல் பல்வேறு கோணங்களில் படம்பிடித்து, கதைக்குத் தேவையான ஒளியுணர்வை அழுத்தமான ப்ரேம்களால் நிரப்பியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் இனியன் ஜே ஹரீஷ்.

சிந்து குமார் இசையில், ‘படிச்சிக்கிறேன்..’ பாடல் சிந்திக்க மட்டுமின்றி நெகிழவும் வைக்கிறது. இந்தப் பாடலை அனைத்து திரையரங்குகளிலும் அனைத்து படங்களுக்கும் முன், திரையிடலாம்.

அனைவருக்கும் கல்வி- அதுவும் அரசு அளிக்கும் கல்வி என்கிற உன்னத நோக்கத்தை வலியுறுத்தும் கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே இயக்குநர் போஸ் வெங்கட்டை பாராட்டலாம்.

‘எதார்த்தமாக’ வில்லனத்தனங்கள் செய்தே, ஒருவருக்கு மனநோயாளி பட்டம் கட்டிவிட முடியும் என்பதை காண்பித்த விதம் பகீர்.

கல்விக்கு எதிரான கதாபாத்திரத்துக்கு சாமி என்றும், அதை ‘சம்ஹாரம்’ செய்யும் கதாபாத்திரத்துக்கு ஞானம் என்றும் பெயர் வைத்தது, ‘நான் அண்ணாதுரை பேரன்டா’ என்று அழுத்தம் திருத்தமாக சில முறை வரும் வசனம்… இவை இயக்குநரின் நேர்மையையும், துணிச்சலையும் வெளிப்படுத்துகிறது. ஆனாலும் எதார்த்தத்தை -உண்மையைச் சொல்ல முயன்ற இயக்குநருக்கு பாராட்டுகள். இயக்குனர் போஸை வெங்கட் மீண்டும் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்று நிரூபித்து இருக்கிறார்.

ஆனாலும், கல்வியின் அவசியத்தை, சாதி ஆபத்தை, கடவுள் என்கிற புனைவை… மிக தைரியமாக மக்களுக்குச் சொல்ல முற்பட்டிருக்கும் திரைப்படம்!

மொத்தத்தில் சார் நாமனைவரும் போற்ற கூடிய ஒரு படம்.