தமிழ் சினிமாவின் “யூத் ஐகான்” சிவகார்த்திகேயன். தொட்டதெல்லாம் துலங்கும் அதிர்ஷ்டமும், அதை பயன்படுத்தி முன்னேறும் அசாத்திய உழைப்புமே சிவாவை இந்த உயரத்தில் வைத்திருக்கிறது. சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்றிருக்கும் வேலைக்காரன் படத்தில் முக்கியமான சமூக பிரச்சனையை மையமாக பேசியிருப்பார்.
புத்தாண்டையொட்டி தனியார் தொலைக்காட்சியொன்றில் அளித்த பேட்டியில் சில முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அவறில் சில,
“சினிமாவில் இப்போது நிறைய இளைஞர்கள் வருகிறார்கள். எல்லோருமே மிகவும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். யூ-டியூப், டிவி, சினிமா எல்லாமே இப்போது ஒன்றாகிவிட்டது. அதனால் வாய்ப்பு என்பது எளிதில் கிடைக்கிறது. நிலைத்து நிற்பதற்குத் தான் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது.
சினிமாவில் கருப்புப் பணம் நிறைய புழங்குகிறது என்ற கருத்து தவறு. எல்லோரும் அப்படி செய்வதில்லை. நானுட்பட முக்கால்வாசி பேர் நேர்மையான முறையில் தான் இயங்குகிறோம்.
சினிமாவிலும் அரசியல் உண்டு. சினிமாவின் அரசியலை புரிந்தவர்களுக்கு, வேறு எந்த அரசியலும் எளிதில் கைகூடும். இயல்பாகவே பணமும், புகழும் எங்கு நிறைய இருக்கிறதோ
அங்கே அரசியல் கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் சினிமாவில் அரசியல் இருக்கிறது.
நான் எப்போதும் பெரிய விசயங்களுக்கு ஆசைப்படுவதில்லை. என் இலக்குகளை எப்போதுமே சிறியதாய் மட்டுமே முடிவு செய்கிறேன். அதை அடைந்தவுடன் அதிலிருந்து அடுத்த இலாக்கை முடிவு செய்கிறேன்.
அப்படித் தான், டிவியில் தொடங்கி இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.
சினிமாக்காரன் அரசியலுக்கு வரக் கூடாது, என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிற யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
அது சினிமா மட்டுமில்லாமல் விளையாட்டு துறையில் இருந்து வருபவராகக் கூட இருக்கலாம். யார் வந்தாலும், யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் இன்றைய இளைஞர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்” என்று பேசினார்.