full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

வேலைக்காரன் சீக்ரெட்ஸ்.. சிவா OPEN TALK!

24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘`வேலைக்காரன்”.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

இதில் `வேலைக்காரன்’ படக்குழுவினர் மோகன் ராஜா, ஆர்.டி.ராஜா, சிவகார்த்திகேயன், அனிருத், ரோபோ ஷங்கர், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், மன்சூர் அலிகான், விஜய் வசந்த், கலை இயக்குனர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் ராம்ஜி உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது,

“வேலைக்காரன்’ தலைவருடைய தலைப்பு. அதை எப்படி வைப்பது? என முதலில் யோசித்தோம். படத்திற்கு பொருத்தமான தலைப்பு இதுதானென்று இயக்குனர் ராஜா சார் சொன்னதால் வைத்தோம். காரணத்தை படம் பார்க்கும் போது உணர்வீர்கள். `வேலைக்காரன்’ தலைப்பை கவிதாலயாவிடம் இருந்து வாங்கி தன் படத்திற்காக வைத்திருந்தார் விஜய் வசந்த். எங்கள் படத்திற்கு கேட்டதும் பெருந்தன்மையோடு கொடுத்தார். ஃபகத் பாஸில் இந்த படத்தில் நடித்தது எங்களுக்கு கிடைத்த ஒரு அதிர்ஷ்டம். அவர் ஒரு சர்வதேச நடிகர். அவரின் நடிப்பை பக்கத்தில் இருந்து பார்த்து, ரசித்து, பயந்து நடித்ததால் தான் நானும் ஓரளவுக்கு நடிக்க முடிந்தது.

ஏகன் பட ஷூட்டிங்கில் தான் முதன் முதலில் நயன்தாராவை நான் பார்த்தேன். அதன் பிறகு எதிர்நீச்சல் படத்துக்கு சம்பளம் கூட வாங்காமல் நடித்து கொடுத்தார். அதன் பிறகு `வேலைக்காரன்’ ஷூட்டிங்கில் தான் அவரை சந்தித்தேன். அவரின் தன்னம்பிக்கை தான் அவருக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியிருக்கிறது. பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறது. இந்த படத்துக்கு கேரவன் கிடையாது, ஒன்றாக அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பேசுவோம். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ராம்ஜி மிகவும் கஷ்டமான படங்களையே தேர்ந்தெடுத்து தான் செய்பவர். முத்துராஜ் சாரின் உழைப்பை படம் பார்க்கும்போது நீங்கள் உணர்வீர்கள்.

அனிருத் இல்லையென்றால் சிவகார்த்திகேயன் இல்லை என்று ட்விட்டரில் பலரும் சொல்வார்கள். அது உண்மை, அதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறார்கள், அதை எப்படி திருப்பி கொடுக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. ரசிகர்களுக்கு நான் கொடுக்கும் பரிசு இந்த `வேலைக்காரன்’. நான் பொதுவாகவே விளம்பரங்களில் நடிப்பதில்லை, இந்த படத்தில் நடித்த பிறகு விளம்பரங்களில் இனி நடிக்கவே கூடாது என முடிவெடுத்திருக்கிறேன். 9 படம் பொழுதுபோக்குக்கு நடித்தால், ஒரு படம் மக்களுக்கு அறிவை புகட்டும் படமாக இருக்கும். “வேலைக்காரன்” முழுக்க முழுக்க கதையை நம்பி மட்டுமே எடுக்கப்பட்ட படம்” என்றார்.