full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நண்பனுக்காக சிவகார்த்திகேயன் எடுத்த புது அவதாரம்!

தன்னுடைய கடும் உழைப்பு மற்றும் பணிவான குணத்தால் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று பல நடுத்தர குடும்ப இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அவர் “சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்” என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். பால்ய காலத்தில் இருந்து இன்று வரை சிவாவின் நெருங்கிய நண்பனாகவும், சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலின் மூலம் மிகவும் பிரபலமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை தான் சிவா தயாரிக்கிறார்.

கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்த படம் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் மகளுக்கும், ஆதரவான அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தியது.

“திரைத்துறை தான் எனக்கு பெயரும், புகழும் கொடுத்தது. இந்த துறைக்கு நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். சாதிக்கும் கனவில் நாங்கள் சுற்றிய போது எல்லா நிலைகளிலும் என்னுடம் இருந்த, என் நண்பர்களின் கனவையும் புரிந்து கொள்வது என் கடமையாக உணர்கிறேன்.அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மிகவும் திறமையானவன் என்பதை ஏற்கனவே நிரூபித்திருக்கிறான். நானும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் என்பதால் அருண் கதையை என்னிடம் சொன்னபோது என்னால் அந்த கதையை என்னோடு பொருத்தி பார்க்க முடிந்தது. சத்யராஜ் சார் அப்பாவாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் மகளாகவும் நடிக்கிறார்கள். இளவரசு, ரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மிகவும் அழகான இளைஞர் தேவைப்பட்டார். அந்த தேடலில் எங்களுக்கு கிடைத்தவர் தான் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் தர்ஷன். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையில், இளையராஜா கலையில் உருவாகும் இந்த படத்தை ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். பல்லவி சிங் ஆடை வடிவமைப்பாளராகவும், வின்சி ராஜ் டிசைனராகவும் பணி புரிகிறார்கள்.

இப்படிப்பட்ட திறமையான கலைஞர்களின் கலவையான குழுவின் மூலம், சிறப்பான ஒரு படத்தை கொடுக்க முடியும் என நம்புகிறேன். கதையிலும், உணர்விலும் இந்த படம் மிக பிரமாண்டமாக இருக்கும். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியில் பூஜையுடன் படத்தை துவக்கியுள்ளோம். நான், அருண்ராஜா காமராஜ், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மூவரும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்த்வர்கள், ஒரே ஊர்காரர்கள். அது தான் முதல் நாள் ஷூட்டிங்கை இங்கு நடத்தியதற்கு முக்கிய காரணம்.

இந்த நேரத்தில் என் பயணத்தில் எனக்கு தொடர்ந்து பேராதரவை அளித்து வரும் மீடியா, என் நலம் விரும்பிகள், என் ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய இந்த புதிய துவக்கத்திற்கும் வழக்கம் போல நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்” என்றார் சிவகார்த்திகேயன்.