full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

எளிய பூஜையுடன் துவங்கியது சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’!

 
பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது, மிகப்பெரிய அளவில் மக்களிடம் சென்று சேர்வது மற்றும் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் படங்களை கொடுப்பவரை தான் ‘நட்சத்திரம்’ என்று வரையறுக்கிறோம். அந்த வகையில், சிவகார்த்திகேயன் தனது அடுத்தடுத்த படங்களால் அவரது கேரியர் கிராஃபை மேலே நகர்த்தி செல்கிறார். அவரது குடும்ப பொழுதுபோக்கு படமான ‘மிஸ்டர் லோக்கல்’ மே 1ஆம் தேதி வெளியாகிறது. அதனை தொடர்ந்து இன்னும் பெயரிடப்படாத ஃபேண்டஸி படமான SK14 படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படமான ‘ஹீரோ’ இன்று காலை (மார்ச் 13) ஒரு எளிய பூஜையுடன் துவங்கியிருக்கிறது. இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க, KJR ஃபிலிம்ஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கிறார்.
தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே ராஜேஷ் கூறும்போது, “KJR ஸ்டுடியோ சார்பில் இந்த படத்தை துவங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு தயாரிப்பாளராக, மிகச்சிறப்பான குணாதிசயங்களை கொண்ட ஒரு புகழ்பெற்ற குழுவுடன் பணியாற்ற நான் மிகவும் ஆவலாக உள்ளேன். வணிக ரீதியிலான அம்சங்களை கொண்ட மற்றும் அதே நேரத்தில் வித்தியாசமான கதையம்சம் உள்ள புது முயற்சிகளில் நடிக்கும் ஒரு நடிகரை கண்டறிவது மிகவும் கடினம். நிச்சயமாக சிவகார்த்திகேயன் இந்த இரண்டு தளங்களிலும் மிகச்சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். வணிக ரீதியிலான மற்றும் தனித்துவமான ஸ்கிரிப்ட்டுகளுக்கு அவர் தரும் தாராளமான முக்கியத்துவம் தான் அவரை ஒரு நட்சத்திரமாக நிலை நாட்டியிருக்கிறது. “ஹீரோ” படமும் வணிகரீதியான அம்சங்கள் கலந்த ஒரு படம். அதன் கதையம்சங்கள் ரசிகர்களுக்கு தனித்துவமான மற்றும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சார் உடன் இணைந்து பணிபுரிவது என் கனவு. அவருடன் பணிபுரியும் அனுபவத்தை நான் தனிப்பட்ட முறையில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இவனா போன்ற இளம் மற்றும் திறமையான நடிகைகள் நடிப்பது படத்திற்கு கூடுதல் மைலேஜ் ஆக இருக்கும்” என்றார். 
இயக்குனர் பிஎஸ் மித்ரன் பற்றி அவர் கூறும்போது, “மித்ரன் ஏற்கனவே தனது திறமைகளை ஒரு இயக்குனராக தனது இரும்புத்திரை படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். என்னிடம் கதை சொல்ல அவர் வந்தபோது, முந்தைய படத்தின் சாயல் கொஞ்சமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் முற்றிலும் வேறுபட்ட மற்றும் புதிய கதையை சொல்லி என்னை அசத்தினார். அவரது முந்தைய திரைப்படத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. ஒரு சாதாரண பார்வையாளனாக பல இடங்களில் புத்துணர்ச்சியையும், கதையோடு ஒன்ற வைக்கும் விஷயங்களையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது” என்றார்.
 
சிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பை கையாள்கிறார்.