full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள வேலைக்காரன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, “எனது படங்கள் தாமதமாவதாகவும் வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாகவும் விமர்சிக்கப்படுகின்றன. சில படங்களின் கதைக்கு அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருப்பதாலும் ஒரு படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்துக்கு செல்ல வேண்டும் என்று நான் முடிவு செய்ததாலும் இந்த தாமதங்கள் ஏற்பட்டுவிட்டன.

அடுத்த வருடத்தில் இருந்து ஆண்டுக்கு இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். எந்த நடிகருக்கும் நான் போட்டி இல்லை. வியாபார ரீதியாக எனது முந்தைய படங்களைத்தான் போட்டியாக பார்க்கிறேன். ஒவ்வொரு நடிகருக்கும் அவரவருக்கான இடம் சினிமாவில் இருக்கிறது. அதை யாரும் பறிக்க முடியாது.

தனுசுக்கும், எனக்கும் எந்த மோதலும் இல்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. மக்களுக்கு என்ன செய்வார்கள் என்ற கொள்கையுடன் அவர்கள் வரவேண்டும். அப்படிப்பட்டவர்களை மக்கள் ஏற்று ஆதரவு கொடுப்பார்கள். நான் அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கவில்லை.

வழக்கமான நகைச்சுவை பாணியில் இருந்து விலகி வேலைக்காரன் என்ற ‘சீரியஸ்’ படத்தில் நடித்து இருக்கிறேன். கஷ்டப்பட்டு வேலை செய்யும் ஒரு இளைஞனுக்கு அவன் வாங்கும் ஊதியம் போதாமல் இருக்கிறது. சம்பாதிக்கும் பணம் எங்கே போகிறது என்ற அவனது உணர்ச்சிகரமான தேடலே இந்த படம். ஒரு நடிகனாக என்னை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பை இந்த படம் வழங்கி இருக்கிறது.

கமர்ஷியல் படங்களை நான் விரும்பினாலும் வேலைக்காரன் போல் சமூகம் சார்ந்த கதைகள் அமையும்போதும் நடிப்பேன். வேலைக்காரன் படத்தில் நயன்தாரா கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது. ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பதுபோல் அவரது கதாபாத்திரம் இருக்கும். படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு அவர் வந்து விடுவார். கேரவேனில் போய் உட்கார மாட்டார்.

அதிக பொருட்செலவில் கூவம், ரெயில்வே மேம்பாலம், குடியிருப்பு அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது.” என்று கூறினார்.