உதவித்தொகை வழங்கிய சிவகுமார் அறக்கட்டளை

News
0
(0)

பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவ-மாணவிகளுக்கு சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேஷன் சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா சென்னை வடபழனியில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு 22 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கினார்கள்.

விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, “பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் 38 வருடங்களாக உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அகரம் பவுண்டேஷனும் இதில் இணைந்து இருக்கிறது. அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு மட்டுமன்றி படிக்க வசதி இல்லாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கி வருகிறோம்.

இந்த ஆண்டு முதல் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிலும் விளையாட்டுகளிலும் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்குகிறோம். அகரம் பவுண்டேஷன் உதவியோடு கல்வி பயின்ற 750 பேர் பல்வேறு நிறுவனங்களில் வேலைக்குத் தேர்வாகி இருக்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.

இதனையடுத்துப் பேசிய நடிகர் சிவகுமார், “நான் பல்வேறு கஷ்டங்களைக் கடந்து நடிகனாகி 192 படங்களில் நடித்து இருக்கிறேன். அதன் பிறகு நடிப்பதை நிறுத்தி மகாபாரதம் கம்பராமாயணத்தை ஆராய்ச்சி செய்து சொற்பொழிவாற்றினேன். உடம்பைப் பேணி பாதுகாத்ததால் தான் இதையெல்லாம் செய்ய முடிந்தது. முகம், கை, கால்கள்தான் நமது அடையாளம். அதைத் தவிர்த்து பார்த்தால் ஒன்றும் இல்லை.

மாதத்தில் 20 நாட்களாவது நடைபயிற்சி செய்கிறேன். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து 5 மணிவரை யோகா செய்கிறேன். அதன்பிறகு ஒரு மணிநேரம் நடைபயிற்சி செய்கிறேன். கடைசி மூச்சு வரை நீங்கள் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்றால் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

லட்சியம் வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும். கல்வி வேண்டும், ஒழுக்கம் வேண்டும். இதனைக் கடைபிடித்தால் உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.” என்றார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.