சினிமாவில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற மாட்டார்கள்: முக்தா பிலிம்ஸின் 60 ஆவது ஆண்டு வைர விழாவில் சிவகுமார் பேச்சு.!*
முக்தாபிலிம்ஸின் அறுபதாவது ஆண்டு வைர விழா சென்னை குமாரராஜா முத்தையா அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரையுலகினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் .
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே. வாசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முக்தாபிலிம்ஸில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நினைவுக் கேடயங்கள் வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசும்போது,
“1954 ல் ‘அந்தநாள்’ படம் எடுத்தபோது அதில் ஒரு உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் முக்தா சீனிவாசன் அவர்கள். 1957- ல் அவர் முதலாளி என்ற படம் எடுத்தார் .அதில் வரும் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே’, பாடல் தமிழ் நாட்டையே கலக்கியது. தேவிகா அதில் அறிமுகமானார் . அந்தப் படத்தை நான் எட்டாவது படிக்கும்போது ஒரு பள்ளிச் சிறுவனாக இருந்து பார்த்தவன். அதற்குப் பிறகு 12 வது முடித்து ஓவியக் கல்லூரி முடித்து சினிமாவுக்கு வந்தபோது அதே தேவிகா எனக்கு ஜோடியாக நடித்தார். “இந்தப் பையனா ஹீரோ? “என்று என்னை இளக்காரமாக அவர் பார்த்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. 1961-ல் முக்தா சொந்தக் கம்பெனி தொடங்கினார். அதில் ஜெமினி கணேசன் சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் முக்தா பிலிம்ஸின் ஆரம்ப காலத்தில் ஆதரவாக இருந்தவர் என்பதை மறக்க முடியாது. ஏ.ஜி.எஸ் ஆபீஸில் வேலை பார்த்து வந்த கே பாலச்சந்தர் லாஸ் ஆப் பேயில் சம்பளமில்லாமல் நிறைய லீவ்
போட்டுவிட்டு சினிமாவில் ஈடுபட்டார். அப்படி வந்த அவர் முக்தா நிறுவனத்துக்காக ‘பூஜைக்கு வந்த மலர்’ என்ற படத்தில் வசனம் எழுதினார். சினிமாவை நம்பி வேலையை விடுவதா? சினிமாவை நம்பலாமா என்று குடும்ப நிலைமையை நினைத்து கவலையாக இருந்தார். முக்தா வீட்டிலிருந்து மாதம் 500 ரூபாய் வரும். அதனால் வீடு நிம்மதி அடைந்தது . அப்படி கே.பிக்கு தைரியம் கொடுத்தது முக்தா நிறுவனம் அப்படி ஒரு முறை சொன்னால் சொன்னபடி சரியாக இருப்பவர்கள்தான் முக்தா நிறுவனத்தினர்.’சூரியகாந்தி’ படம் எடுத்தார்கள். கதாநாயகன் முத்துராமன். ஜெயலலிதா நடித்திருந்தார். இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில் எப்போதும் சினிமாவை வெறுக்கும், சினிமாவை விமர்சிக்கக் கூடிய பெரியார் கலந்து கொண்டு சிறப்பித்தார் .அது பெரிய பெருமை.
இந்த நிறுவனத்தில் சிவாஜி 11 படங்கள் நடித்தார். ரஜினி ஒரு படத்தில் நடித்துள்ளார் .கமல் இரண்டு படங்களில் நடித்தார். நான் இரண்டு படங்களில் நடித்தேன். இங்கே நேர்மை நாணயம் உழைப்பு என்று எழுதப்பட்டு இருந்தது .அதற்கு உண்மையான உதாரணமாக இருந்தவர்தான் முக்தா சீனிவாசன் அவர்கள்.
சினிமாவில் சொன்ன சொல்லை யாரும் காப்பாற்றுவது இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் சினிமாவில் மூன்று பேர் விதிவிலக்காக உறுதியாக இருந்தார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ், சின்னப்ப தேவரின் தேவர் பிலிம்ஸ் , முக்தா பிலிம்ஸ் நிறுவனம்.இந்த மூன்று நிறுவனங்களிலும் சொன்ன சொல்லைக் கடைசி வரை காப்பாற்றினார்கள்.முக்தா அவர்கள் படத்தில் நான் ‘அவன் அவள் அது’ படத்தில் நடித்தபோது சம்பளம் பேச முக்தா சீனிவாசனின் சகோதரர் ராமசாமி வந்தார் .உதாரணமாக நான் 25 ஆயிரம் ரூபாய் கேட்டால் அவர் 15 ஆயிரம் என்றார். என் சம்பளத்தை முடிவு செய்வதற்கு நீங்கள் யாரென்று சண்டைபோட்டேன். போய் விட்டார். 15 நாள் கழித்து வந்தார். படத்தின் படப்பிடிப்பு நாட்கள் ,பிலிம் ரோல்கள் என்று பட்ஜெட் எல்லாம் சொல்லி சமாதானப்படுத்தி அவர் கேட்ட தொகைக்கே நடிக்க வைத்து விட்டார். சிக்கனமாக இருப்பார்கள்.ஆனால் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள்.40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தும் திட்டங்கள் எல்லாம் சொல்லி என்னை சமாதானப்படுத்தி விட்டார். நான் சண்டை போட்டாலும் என்னை சமாதானப்படுத்தி நடிக்க வைத்து விட்டார் ராமசாமி. அப்படி ஒரு நிர்வாகி
அவர்.நான்’ ராமன் பரசுராமன் ‘படத்தில் நடிக்க சிங்கப்பூர், ஜப்பான் என்று வெளிநாடு போனபோது முக்தா அவர்கள் படத்திற்கு வருவதற்கு ஒருநாள் தாமதமானது. பதற்றமானார்கள். கோபப்பட்டார்கள். முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத சூழல். உடன் நடிக்கும் லட்சுமி ,நிழல்கள் ரவி காத்திருக்கவேண்டும். நான் அவர்களைச் சமாதானப் படுத்தி விடுகிறேன் என்றேன். அவர்களைச் சமாதானப்படுத்தி நான் முதல் நாள் படப்பிடிப்பு நடத்தச் சொன்னேன். வெளிநாட்டிலிருந்து வந்த நான் தாமதமாகச் செல்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியோடு படப்பிடிப்பிற்குப் போனேன். நான் நுழையும்போதே என் கையில் சொன்னபடி பணத்தை திணித்தார் ராமசாமி .இதுதான் அவர்களின் நாணயம்.படப்பிடிப்பிலும் திட்டமிட்டு நடத்துவதால் சிக்கனமாக நடத்துவார்கள் .காஷ்மீருக்கு படப்பிடிப்பு என்றால் நாலாவது நாள் குழு சென்றால் ஆறுநாட்கள் முன்பே சமையல் தட்டுமுட்டு சாமான்கள் எல்லாம் அனுப்பி விடுவார்கள்.
நான் வாஹினி ஸ்டுடியோவில் ஒரு படத்தில் சத்யராஜுடன் சேற்றில் புரண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அந்த நிலையில் என் ஜெர்க்கின் பையில் பணத்தை திணித்துவிட்டு போனார். அவர்தான் ராமசாமி கொடுக்க வேண்டிய பாக்கிப் பணம் அது.எப்படி இருந்தாலும் எங்கிருந்தாலும் முக்தாவின்
பணம் தேடி வந்துவிடும். அப்படிப்பட்ட வார்த்தை நாணயத்துக்குச் சொந்தக்காரர்கள் தான் அவர்கள்.ஒழுக்கத்திற்கு சீனிவாசன் என்றால் நேர்மைக்கு ராமசாமி .இப்படிப்பட்ட மகா மனிதர்கள் சம்பந்தப்பட்ட விழாவில் நானும் கலந்து கொண்டு பேசியதற்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி. ” என்றார். இந்த விழாவில் பழம்பெரும் நடிகைகள் செளகார் ஜானகி, வாணிஸ்ரீ, சங்கீதா, சச்சு ,எஸ். என். லட்சுமி, சத்யப்ரியா, நடிகர்கள் ராஜேஷ், ராதாரவி, எஸ்.வி .சேகர் , ஒய்.ஜி.மகேந்திரன், கிரேஸி பாலாஜி, ஆனந்த்பாபு, தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பன் , திருமதி லதா ரஜினிகாந்த், இயக்குநர்கள் சந்தான பாரதி, சித்ரா லெட்சுமணன்,பாடகிகள் பி. சுசிலா, எல் .ஆர். ஈஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாட்டை முக்தா ராமசாமி குடும்பத்தினர் மற்றும் முக்தா சீனிவாசன் குடும்பத்தினர் இணைந்து செய்திருந்தார்கள் .விழாவில் கலந்து கொண்ட மூத்த கலைஞர்கள் தங்களுக்குள் கலந்துரையாடி மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர் . இதுபார்ப்பதற்கு ஒரு குடும்ப விழா போலவே இருந்தது.