full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

சின்ன கபாலியுடன் ஆட்டம் போடும் ரஹீம் பாய்! சிவலிங்கா – விமர்சனம்

 

சந்திரமுகியின் இயக்குநர் பி.வாசு, காஞ்சனாவின் இயக்குநர் மற்றும் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் உடன் கூட்டணி என்றால் இயல்பாக எதிர்பார்ப்புகள் எகிறும் தான். அப்படி இயல்பாகவே சிவலிங்கா படத்திற்கு எதிர்பார்ப்பு அமைந்தது என்றால் பி.வாசுவும் ராகவா லாரன்சும் ரசிகர்களை திருப்திபடுத்தியும் அனுப்புவார்கள் என்பது மகிழ்வான ஒன்று.

பாடல்கள், காமெடி, பேய், கிராபிக்ஸ் என சிவலிங்காவில் குடும்பங்களையும் குழந்தைகளையும் அம்சங்கள் சிறப்பாக வந்திருக்கிறது.

சந்திரமுகி, முனி, காஞ்சனா வகையறா பேய் மசாலா படம் தான். பேய் பழிவாங்க அலையும் கதை தான். ஆனால், கடுப்பேத்தாமல் சலிப்பேற்படுத்தாமல் செல்லும் திரைக்கதை நல்ல பொழுதுபோக்காக அமைந்திருக்கிறது.

எப்போதும் போலவே லாரன்ஸ் இந்த படத்தின் பாடல்களிலும் அட்டகாசமாக அசத்துகிறார். தமனின் இசையும் விவேகாவின் வரிகளும் ஆட்டம் போட வைக்கிறது. மொட்ட சிவா, கெட்ட சிவா படத்தில் மக்கள் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து பிரச்சினை ஆனது என்றால்… சிவலிங்காவில் சின்ன கபாலி என்று ரணகளம் பண்ணுகிறார் லாரன்ஸ். இந்த சின்ன கபாலி பாடலிலும் லாரன்ஸின் மாற்றுத்திறனாளி நடனக்கலைஞர்கள் ஆட்டம் போடுகிறார்கள். ஏன், அவர்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறேன் என்பதற்கு லாரன்ஸ் சமீபத்தில் காரணம் சொன்னார். இவர்கள் இப்படி படத்தில் ஆடுவதின் மூலமாக கோயில் விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் ஆட இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதில் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும். இவர்கள் பாப்புலர் ஆனால் இவர்களுக்கு கொடுக்கிற தொகையும் கொஞ்சம் கூடும் அதனால் தான் அவர்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறேன் என்றார். அதோடு சிவலிங்கா படத்தில் ஆடிய அந்த கலைஞர்கள் அத்தனை பேருக்கும் ஆளுக்கு 1 இலட்சம் ரூபாய் சன்மானம் கொடுத்த்தாகவும் குறிப்பிட்டார். சிறப்பு, ராகவா லாரன்ஸ்.

நடன அசைவுகளில் மட்டுமல்ல அழகழகான காஸ்ட்யூம்களிலும் அசத்துகிறார் லாரன்ஸ். அட, இறுதிச்சுற்று ரித்திகா சிங்கையும் ஆட வைத்திருக்கிறார். வளைந்து நெளிந்து ரித்திகா ஆடுகையில்… அட இந்தப்பொண்ணு இப்டி எல்லாம் ஆடுமா, ஆட முடியுமா என் வியப்பே வருகிறது.

சிவலிங்காவில் நிறைய நட்சத்திர பட்டாளம். வடிவேலு மீண்டும் கத்தி படத்தில் வந்தாலும், இந்த படம் தான் வடிவேலுவுக்கு உண்மையான ரீஎன்ட்ரி என்று சொல்லும் அளவுக்கு வடிவேலு சிரிக்க வைக்கிறார்.

இந்து பேய், முஸ்லீம் பேய், புறா ரேஸ்.. என ஏற்கனவே பழக்கப்பட்ட விசயங்கள் தான், ஏற்கனவே இந்த பேய்கள் மீது அதிகப்படியான அலர்ஜியில் இருப்பவர்களைத்தாண்டி மற்றவர்கள் ரசிக்கலாம். கிராபிக்ஸ் மிக சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். ரித்திகா சிங், எப்படி இந்த படத்திற்கு கதாநாயகி ஆனார் என்பது ரித்திகா சிங்… பேயாக மாறும்போது உங்களுக்கு பிடித்துவிடும். ப்ப்ப்பாஆஆஆஆஆ ….

சக்திவேல் வாசு, ரஹீம் பாய் ஆக சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் தான் பேசும் மொழியை அடிக்கடி மாற்றுகிறார் ஏனோ. அப்பா பி.வாசு தான் இயக்குநர் என்றாலும் மிக சிறப்பான ஒரு பாடலில் சக கதாநாயகனும் ஜொலிக்க சம்மதித்த ராகவா லாரன்ஸை பாராட்டவேண்டும். ராகவா லாரன்ஸ் என்ட்ரி பாட்டுக்கு சற்றும் குறைவில்லாத “சாரா சாரா” பாடலில் சக்திவேல் வாசு… சிறப்பாக ஆடுகிறார். பேயாக மாறும்போது மிரட்டுகிறார். ஆனால்… கொஞ்சம் உடம்பை மட்டும் குறைங்க பிரதர்.

பொழுதுபோக்கிற்காக படம் பார்ப்பவர்களுக்கும், லாஜிக் பற்றி தீவிரமாக யோசித்து கவலைப்படாதவர்களுக்கும் சிவலிங்கா… நிச்சயமாக பிடிக்கும். போனோமா படம் பார்த்தோமா, ரசிச்சோமான்னு இருக்கிறவங்க சிவலிங்காவை நம்பி பார்க்க போலாம்.

– முருகன் மந்திரம்