சிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்

Reviews
 ஜிவி பிரகாஷும், லிஜோ மோல் இருவரும் பெற்றோர் இல்லாமல் வளரும் அக்கா, தம்பி. இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் பாசத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். பைக் மீது தீவிர பைத்தியமாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ், வளர்ந்த பிறகு பைக் ரேஸ் ஓட்டும் பழக்கம் ஏற்படுகிறது. அப்படி ஒரு பைக் ரேசின் போது போக்குவரத்து அதிகாரியான சித்தார்த்திடம் மாட்டிக் கொள்கிறார். மேலும் சித்தார்த் ஜி.வி.பிரகாஷை அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் சித்தார்த் மீது கடுப்பாகிறார் ஜி.வி.பிரகாஷ்.
இந்நிலையில், அக்கா லிஜோமோலுக்கு மாப்பிள்ளையாக சித்தார்த் வர, ஜி.வி.பிரகாஷுக்கு பிடிக்காமல் போகிறது. ஆனால், லிஜோமோலுக்கு சித்தார்த்தை பிடித்து போக, திருமணத்திற்கு சம்மதிக்கிறார். ஒரு கட்டத்தில் ஜி.வி.பிரகாஷ், அக்காவிடம் நடந்ததை சொல்ல, அவரும் மனதை கல்லாக்கிக் கொண்டு, சித்தார்த்தை வெறுக்கிறார். இந்நிலையில், சித்தார்த்தும் ஜி.வி.பிரகாஷுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை என்ன? எப்படி சமாளித்தார்கள்? சித்தார்த்தும், லிஜோமோலும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.
சித்தார்த் போக்குவரத்து அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருத்தி இருக்கிறார். நேர்மையில் திமிறுவது, ஜிவி.பிரகாஷுடன் மல்லுக்கட்டுவது, குடும்பத்திற்காக ஏங்குவது என நடிப்பில் அசத்தி இருக்கிறார். பைக் ரேசராக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக நடித்திருக்கிறார். அக்கா லிஜோமோலுக்காக அழும் இடத்தில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
 
ஜி.வி.பிரகாஷின் அக்காவாக நடித்திருக்கும் லிஜோ மோலுக்கு முக்கிய பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அன்பு, பிரிவு, வலி என நடிப்பில் பளிச்சிடுகிறார். மற்றொரு நாயகியாக வரும் காஷ்மிரா கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
பிச்சைக்காரன் படத்திற்குப் பிறகு இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சசி. கமர்ஷியல் படமே என்றாலும் இன்றைய இளைஞர்களின் பொறுப்பற்ற தன்மையையும், அவசர உலகின் பயணத்தையும் அதில் உறவுகளின் பங்கையும் இணைத்துக் கதையாக சொல்லியிருக்கிறார். இதில் மாமன் மச்சான் உறவை ரசிக்கும் வகையில் கொடுத்திருப்பது சிறப்பு. முதல் பாதி காமெடியுடனும், இரண்டாம் பாதி சென்டிமென்ட்டாகவும் கொடுத்திருக்கிறார். படம் விறுவிறுப்பாக செல்லும்போது, பாடல்கள் தடையாக இருப்பது போல் தோன்றுகிறது.
சித்துகுமாரின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’  ஒரு நேர்மையான பாசப்போராட்டம்