அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக அதிநவீன திரையரங்கம்

News
0
(0)

அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணை கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் என காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்த திரையரங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் இளைஞர் அணி தலைவர் கோ.ப. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார்.

“அண்ணா நகருக்கும், பாடிக்கும் இடையில் சிறப்பான இடத்தில் அமைந்திருக்கிறது எங்களின் சிவசக்தி திரையரங்கம். அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான, தரமான, நிறைவான  பொழுதுபோக்கினை நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் வகையில் இந்த திரையரங்கை உருவாக்கியிருக்கிறோம். இந்த காலத்திற்கேற்ப நிறைய படங்களை வெளியிடும் வகையில் இரண்டு திரையரங்குகளாக மாற்றி அமைத்திருக்கிறோம். ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப படங்களை தேர்ந்தெடுத்து பார்த்து மகிழலாம். இளம் ரசிகர்கள் விரும்பும் வகையில் அனைத்து மொழி படங்களும் இங்கு திரையிடப்பட இருக்கின்றன. சினிமாவில் அதிநவீன தொழில்நுட்பங்களான டால்பி அட்மாஸ் சவுண்டும், 4கே திரையையும்  நிறுவியிருக்கிறோம். Pro VA Barco இந்த வசதிகளை சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறது. பெண் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் மிகவும் பாதுகாப்பான திரையரங்காகவும் எங்கள் திரையரங்கம் இருக்கும். இரண்டு திரையரங்குகளிலும் முறையே 487, 265 பேர் அமர்ந்து படத்தை பார்க்கலாம். விசாலமான கார் பார்க்கிங், கேண்டீனில் மிக குறைந்த விலையில் உணவு பொருட்களும் கிடைக்க வழி வகை செய்திருக்கிறோம்” என்றார் திரையரங்க நிர்வாக இயக்குனர் முருகானந்தம்.

விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே ராஜன் கூறும்போது, “சென்னை சிட்டியை தாண்டி பாடியில் மிகப்பெரிய பொருட்செலவில் இந்த திரையரங்கை அமைத்திருப்பது அவர்கள் சினிமாத்துறையின் மீது வைத்துள்ள அபிமானத்தை காட்டுகிறது. திரையுலகம் மோசமான சூழலில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், மக்களை மகிழ்விக்கும் நல்ல நோக்கத்தோடு இவர்கள் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. படித்த மக்கள் விரும்பும் வகையில், அவர்களின் ரசனைக்கேற்றவாறு ஒளி, ஒலி அமைப்புகளை அமைத்திருக்கிறார்கள். சினிமாத்துறை நடத்தும் வேலை நிறுத்தத்தால் ஃபெப்ஸி தொழிலாளர்கள் உட்பட சினிமாவை நம்பி இருக்கும் 1 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். இவர்களை தவிர்த்து திரையரங்கை மூடுவதால் ஒவ்வொரு திரையரங்கிலும் 50 பேர் வீதம் அதில் பணி புரியும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாடு முழுக்க 1100 திரையரங்குகள் உள்ளன. மக்கள் திரையரங்குகளுக்கு வருவதற்கு கட்டண குறைப்பு செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லை. ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி ரத்து செய்தாலே அனைத்து தரப்புக்கும் அது சாதகமாக அமையும். நடிகர்கள் சம்பளத்தை குறைத்தாலே பாதி பிரச்சினை முடியும். இன்னும் பத்து நாட்களில் இந்த நிலை சீராக வேண்டும். சினிமா தொழில் வழக்கம் போல நடக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட Pro VA நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் சித்தார்த் கூறும்போது, “சிவசக்தி திரையரங்கிற்கு பார்ட்னராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் பல திரையரங்குகளில் எங்கள் நிறுவனம் தான் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு முழுக்க 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் Pro VA டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருகிறது. இன்னும் பல திரையரங்குகள் எங்கள் சேவையை பெற எங்களோடு பேசி வருகிறார்கள். யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாத படி படங்களை மிகவும் பாதுகாப்பாக திரையரங்குகளுக்கு வழங்குகிறோம். பல திரையரங்குகள் இன்னமும் ஈ சினிமா, டி சினிமா தொழில்நுட்பத்தில் இருக்கும்போது, நாங்கள் 4கே அதிநவீன, டால்பி அட்மாஸ் என அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறோம். தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர் என அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் நியாயமான விலையில் சேவைகளை வழங்குவதே எங்கள் நோக்கம். இந்த திரையரங்கில் படத்தை பார்த்த பலரும் ஒளி, ஒலி சிறப்பாக இருப்பதாக கூறி விட்டு சென்றது எங்களுக்கு கிடைத்த நற்சான்றாக எடுத்துக் கொள்கிறோம்” என்றார். 

வரும் 16ஆம் தேதி முதல் திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள். சிவசக்தி திரையரங்கம் தொடர்ந்து செயல்படுமா அல்லது வேலை நிறுத்தத்தில் பங்கு பெறுவீர்களா? என கேட்டதற்கு, மக்களுக்காக நிறைய செலவு செய்து திரையரங்கை தயார் செய்திருக்கிறோம். அதனால் தொடர்ந்து படங்களை திரையிடுவோம் என்றார் திரையரங்க உரிமையாளர் படூர் ரமேஷ். 

இந்த திறப்பு விழாவில் தே.மு.தி.க இளைஞர் அணி செயலாளர் எல்.கே சுதீஷ், கு.க செல்வம், ஆஸ்கார் ஃபிலிம்ஸ் சுரேஷ், பூச்சி முருகன், ரெட் ஜெயண்ட் மூவீஸ் செண்பகமூர்த்தி, சந்திரசேகர் ஐபிஎஸ், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, ட்ரீம் ஃபேக்டரி சக்திவேலன், ஜிகே சினிமாஸ் ரூபன் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். படூர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.