full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

‘தல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெரும் வல்லமைபடைத்தவர்கள் தான் – எஸ்.ஜே.சூர்யா

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு தனிப்பட்ட விதமாக நன்றி சொல்ல இன்று பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தார். அப்போது எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது :-

‘வாலி‘யில் இயக்குநராக ஆரம்பித்த என் பயணம், ‘மான்ஸ்டர்‘-ல் முற்றுப்புள்ளி அல்ல, இந்த பயணம் தொடரும். நான் நல்லது செய்யும்போது பாராட்டி, தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. புகழை அனைவருக்கும் சேர்க்க அவர்கள் தவறியதில்லை. அதற்கு ஆதாரம் தான் இப்படத்தின் வெற்றி. இந்த வெற்றியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

உதவி இயக்குநராக பணியாற்றிய காலத்தில் ஸ்டுடியோக்களில் நடக்கும் படப்பிடிப்பிற்கு ரூ.50/- கொடுத்து வேடிக்கைப் பார்ப்பேன். பாலைவனத்தில் ஒட்டக மனிதனாக நடந்து வந்தபோது இந்த பயணம் சோலைவனமாக தெரிகிறது. நேற்று மக்களோடு திரையரங்கில் சென்று படம் பார்த்தேன். ‘இறைவி’ படக்குழுவினரும், பாபிசிம்ஹாவும் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். அவருடைய குழந்தையும், மற்றும் அங்கு வந்திருந்த குழந்தைகளும் எலி வரும் காட்சிகளில் ஆளுக்கொரு விதமாக ஓசை எழுப்பி உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

 

ஒரு நடிகனாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் 25 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு நிறைவேறியிருக்கிறது. இந்த புதுபயணம் தொடரும். என் படத்திற்கு குடும்பத்தோடு வந்து பார்க்கும்போது இத்தனை நாள் இதை தவறவிட்டோமே என்று குற்றவுணர்வு வருகிறது. இத்தனை ஆண்டுகள் நான் ஏன் இதை செய்யவில்லை? என்று தோன்றியது. எலியால் தொடங்கிய இந்த பயணத்தை இதேபோல் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க ஏங்கி கொண்டிருக்கிறேன். நல்ல வாய்ப்பு என்னைத்தேடி வரும் என்றும் நம்புகிறேன்.

இந்த படத்திற்கு திரையரங்கத்தின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. ஏனென்றால், இப்படத்தில் குத்துப்பாடல், காதல் காட்சிகள் எதுவும் இல்லாததால் தரமான படத்தை அனைவரும் ஆர்வமாக வந்து பார்க்கின்றனர். ‘நியூ’ படத்தின் பெரிய வெற்றியைக் கொடுத்தீர்கள். அதேபோல் இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. ‘வாலி‘-யில் என்னை உயரத்தில் வைத்ததும் அதன்பிறது நான் தவறு செய்து சறுக்கும்போது என்னைத் தட்டிக் கேட்ட பத்திரியாளர்களுக்கு நன்றி.

இப்படம் புதிய பயணத்தின் தொடக்கமாக கருதுகிறேன். எலியின் மூலம் பிள்ளையார் சுழி போட்டு இந்த பயணம் தொடங்கியிருக்கிறது. இயக்குநர் நெல்சனின் கதைக்கு நான் கருவியாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

என் படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும். ஆனால், ‘இறைவி‘-யில் இருந்து அது மாறியிருக்கிறது. என்னை நம்பி தரமான பாத்திரம் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்-க்கும் நன்றி. ராஜுமுருகன் இப்படம் ‘ஜென்’ கதையை படமாக எடுத்தது போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

எலியை நான் பிள்ளையாரின் வாகனமாக தான் பார்க்கிறேன். ஆகையால் என் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்குமா என்ற பயம் எனக்கில்லை. படம் பார்க்கும்போது நீங்கள் என்ன உணர்ந்தீர்களோ, அதை நெல்சன் கதை கூறும்போதே நான் உணர்ந்தேன்.

ஒரு நடிகனாக உழைப்பதே நான் விரும்பும் சரஸ்வதி என் நடிப்பு. அதன் மூலம் லட்சுமி வரவேண்டும் என நினைக்கிறேன். லட்சுமி என்று பணம், புகழ் இரண்டையும் குறிப்பிட்டுதான் கூறுகிறேன். ஒரு தமிழ் படம், அடுத்து ஹிந்தி, பிறகு தமிழ், தெலுங்கு இந்த வரிசையில் நடிக்க விரும்புகிறேன்.

நான் சாதாரண வாழ்க்கைதான் வாழ விரும்புகிறேன். எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கிவில்லையென்றால் என் கையில் இருக்கும் கதையைக் கொண்டு நானே நடிப்பேன்.

அமிதாப் பச்சன் சார் ஒவ்வொரு காட்சியும் ஒரே டேக்கில் நடித்து விடுவார். ஒரு எக்ஸ்டிரா டேக் கூட வாங்கமாட்டார். ஒவ்வொரு காட்சியையும் முதல் வாய்ப்பாக கருதி நடித்துவிடுவார். 59 ஆண்டுகாலமாக அவர் வெற்றியின் ரகசியம் இதுதான்.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ செல்வராகவனின் இயக்கத்தில் நன்றாக வந்திருக்கிறது. ‘மாயா‘ படத்தின் இயக்குநரின் இயக்கத்தில் ‘இரவா காலம்‘ இரண்டு படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

விஜய் அஜித் இருவருமே எந்த முடிவெடுத்தாலும் அதைச் சரியாக செய்து வெற்றியடையக் கூடியவர்கள். அது அரசியலாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி இருவருக்கும் வெற்றி பெரும் வல்லமை இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன்.

வாழ்க்கையில் நாம் அடையும் தோல்வி அனைத்தையும் கற்றுக் கொடுக்கும். ஒரு படம் தயாரித்தால் போதும் ஆனித்து அடங்கிவிடும்.

சினிமாவில் ஒரு தவறுசெய்துவிட்டால் அடுத்த வாய்ப்பு வருவதற்கு 8 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை வேறுவழியில்லாமல் கிடைத்த வேலையெல்லாம் செய்தாக வேண்டும்.

தயாரிப்பு பணியை எடுத்ததே நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் தான். ‘உயர்ந்த மனிதன்‘ பல தடைகளைத் தாண்டி விரைவில் அனைத்து பிரச்னைகளும் முடிந்து கண்டிப்பாக வெளியாகும்.

இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா பேசினார்.