சும்மா வழியில் போனவனைக் கூப்பிட்டு போட்டு சாத்து சாத்தென்று சாத்திவிட்டு, பார்த்து போ.. என்று அறிவுரை சொன்னால் எப்படி இருக்கும் அவனுக்கு?
அப்படித்தான் நம் நிலைமையும் ஆகிப் போனது “ஸ்கெட்ச்” பார்த்து முடித்ததும்.
அடின்னாலும் அடி கொஞ்ச நஞ்ச அடியில்லை, மரண அடி. நாக்கு வரண்டு, தொண்டை கவ்வி கிடக்கும் போது கடைசியாக “இதெல்லாம் செய்யக் கூடாது சரியா!” என்று மெசேஜ் சொல்கிறார்கள்.
உண்மையிலேயே அவர்கள் சொல்ல நினைத்த விசயம் சூப்பரான விசயம் தான். அந்த நல்ல மனதிற்காகவும், அக்கரைக்காகவும் பாராட்டலாம் நிச்சயமாக. ஆனால் ஒட்டுமொத்த படமென்று வரும் போது நாம் ரசிப்பதற்கான நிறைய காரணங்கள் இருக்கிறதல்லவா? அது அத்தனையும் டோட்டலாகவே மிஸ்ஸாகியிருக்கிறது.
விக்ரம் ரொம்ப டயர்டாகவே தெரிகிறார். அவர் எவ்வளவோ முயற்சித்தும், பழைய “ஜெமினி” விக்ரமை அவரால் கொண்டு வரவே முடியவில்லை. சீயானுக்கு வயசாயிடுச்சு.
தமன்னா, கண்ணை உறுத்தும் அளவிற்கு வெள்ளை வெளேரென்று இருக்கிறார். மனதில் கொஞ்சம் கூட ஒட்டாத அக்மார்க் கமெர்சியல் சினிமா கதாநாயகி வேடம். வருகிறார், காதலிக்கிறார், டான்ஸ் ஆடுகிறார், போகிறார் அவ்ளோ தான்.
தமனின் அதே தெலுங்கு சினிமா இசை. அதுவும் அந்த வில்லன் பிஜிஎம் பல படங்களில் பல வில்லன்களுக்கு போட்டு சக்கை பிழிஞ்ச பிஜிஎம். தமனெல்லாம் தமிழுக்கு செட்டே ஆக மாட்டாப்ள. பேசாம தெலுங்கு பக்கமே போயிடு சிவாஜி.
சூரி, ஸ்ரீபிரியங்கா, ஸ்ரீமன், வேல ராமமூர்த்தி, விஸ்வாந்த் எல்லாம் இருக்காங்க. இருந்து என்ன பண்றது? சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
பல படங்களில் பார்த்து சலித்த அதே கதை. புதுவகையான திரைக்கதை அமைப்பு கூட இல்லை. துண்டு துண்டாய் காட்சிகள் நகர்வது ஒருவகையான உளைச்சலைத் தருகிறது.
லேட்டாகவே வந்தாலும் ஜாலியான “வாலு” படத்தைத் தந்த விஜய் சந்தரின் படமா இது? கலைப்புலி தாணு தயாரிப்பு, விக்ரம் – தமன்னா காம்பினேஷன் என செம்ம டீம் கிடைத்தும் அப்பட்டமாய் கோட்டை விட்டிருக்கிறார்.
“ஸ்கெட்ச்” மிஸ்ஸானா சொல்லுனு சொன்னீங்களே சீயான், கண்ணாபின்னானு மிஸ்ஸாயிடுச்சு. வெரி சாரி!