ஒரு சிறிய திரைத் தொடர் வரலாற்றின் தலைசிறந்த படைப்புகளுல் ஒன்றாக அங்கீகரிக்கப்படும் சில அபூர்வ நிகழ்வுகள் எப்போதாவது தான் நிகழும், ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகும் அது பார்வையாளர்களின் விருப்பபட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும். இயக்குனர் நாகாவின் “ரமணி Vs ரமணி” தொடரானது இதற்கு மிகச்சிறந்ததொரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. சின்னத்திரையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை தந்ததோடு அல்லாமல், இப்போதும் ஆன்லைன் தளங்களிலும் ஒரு அற்புதமான அனுபவத்தை தொடர்ந்து தந்து வருகிறது. ‘குடும்ப டிராமா’ என்ற அடிப்படைக் கருவில் மிகச்சிறப்பான நகைச்சுவை தூவப்பட்டு, அட்டகாசமான வகையில் உருவாக்கப்பட்ட இத்தொடர், இது உலகளாவிய ரசிகர்களின் விருப்பமிகு தொடராக மாறிவிட்டது. இந்த தொடரின் இரண்டு சீசன்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில், இயக்குனர் நாகா மீண்டும் ‘ரமணி Vs ராமனி 3.0’ என்ற புதிய மூன்றாவது சீசனுடன் வந்துள்ளார்.இந்தத் தொடரில் முன்னணி நடிகர் ராம்ஜி மீண்டும் மிஸ்டர். ரமணியாக நடிக்கிறார் மற்றும் வாசுகி ஆனந்த் மிஸஸ் ரமணியாக நடிக்கிறார். இவர்களது மகளாக ‘ராகினி’யாக பொன்னி சுரேஷ் நடிக்க, மகன் ‘ராம்’ வேடத்தில் பரம் குகனேஷ் நடிக்கிறார்.
இந்த புதிய சீசன் குறித்து இயக்குனர் நாகா கூறியதாவது..,
குடும்ப வாழ்க்கை என்பது ஏற்ற தாழ்வுகள், கண்ணீர் தருணங்கள் மற்றும் மகிழ்ச்சிகள் நிறைந்தது. எந்த குடும்பத்திலும் இதுதான் அமைப்பாக இருக்கும். இந்தப்பொதுமை என்பது புவியியல் எல்லைகளை மட்டுமல்ல, இனம், மதம், சாதி அல்லது மதம் ஆகியவற்றைக் கடந்தது. மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியக் குடும்பம் சில விஷயங்களில் தனித்துவமானது. தாத்தா, பாட்டி, மகன்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் வாழும் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு வேகமாக மறைந்து வந்தாலும், ஒவ்வொருவரின் வாழ்விலும் இந்த உறவினர்கள் செலுத்தும் வலுவான செல்வாக்கு (குறுக்கீடு, சரியான நேரங்களில்) பாதிப்புகள் எப்போதும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது. அதனால் இன்றும் தனித்தனியாக வேறு வேறு இடங்களில் வாழ்ந்தாலும், கூட்டுக் குடும்ப மனநிலையில் தான் வசித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் வாழும் குடும்பங்களுக்கு, வெளி உலகத்திலிருந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தவிர, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈகோ மோதல்கள், தலைமுறை இடைவெளிகள், இணக்கமின்மை, டீனேஜ் துயரங்கள் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற அதன் சொந்த பிரச்சினைகள் பல உள்ளன. அவற்றை இந்த தொடர் அட்டகாசமான நகைச்சுவை பாணியில் தரும்.
கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளரான புஷ்பா கந்தசாமி கூறும்போது…,
ஒரு தயாரிப்பாளராக, எங்களின் ஆல் டைம் ஹிட் தொடரான ‘ரமணி Vs ரமணி’யின் புதிய சீசனை உருவாக்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆன்லைன் தளங்களில் இந்த தொடருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு, இந்த புதிய மூன்றாவது சீசனை உருவாக்க காரணமாக அமைந்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக அமர்ந்து , எங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்த அட்டகாச தருணங்களை இத்தொடரின் கருப்பொருளாக உருவாக்கியுள்ளோம். இன்றைய குடும்பங்களில் தினசரி நடக்கும் பொதுவான அம்சங்களின் அடிப்படையில், இந்தப் புதிய சீசனை உருவாக்கியுள்ளோம், இது ரசிகர்களின் வாழ்வை பிரதிபலிப்பதோடு, பார்வையாளர்களை சத்தமாக சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கும்.
ராமனி Vs ரமணி 3.0 தொடரை இயக்குநர் நாகா இயக்குகிறார். முதல் இரண்டு பாகங்களை தயாரித்த கவிதாலயா புரடக்சன்ஸ் நிறுவனத்தின் தொலைக்காட்சி பிரிவான மின்பிம்பங்கள் இந்த புதிய மூன்றாவது சீசனையும் தயாரித்துள்ளது. கோபு பாபு, பரத், விக்னேஷ்வரி ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனம் எழுதுகிறார்கள். சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார், ரெஹான் இசையமைக்கிறார், சிவா யாதவ் கலைத் இயக்கம் செய்கிறார்.