நம்மவர் சொன்னால் தேர்தலில் நிற்பேன்.. சினேகன் அதிரடி!

News

பாடலாசிரியர் சினேகன் ஏராளமான படல்களை எழுதியவராக இருந்தாலும், “பிக் பாஸ்” என்ற ஒற்றை நிகழ்ச்சியின் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்தார். அந்த நிகழ்ச்சியில் அவரது கட்டிப்புடி வைத்தியத்திற்கு தமிழகம் முழுவதும் பயங்கரமான வரவேற்பு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு அடுத்தடுத்து மூன்று படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். இடையில் கமல் தொடங்கிய “மக்கள் நீதி மய்யம்” கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ் வார இதழ் ஒன்றிற்கு அவரளித்திருக்கும் பேட்டியில், “கமல் சொன்னால் தேர்தலில் நிற்பேன்” என்று கருத்து கூறி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது,

“பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதினால் மட்டும் கமலின் கட்சியில் சேரவில்லை; அவருடன் பயணம் செய்ய பிடிக்கும். அதனாலதான் அவருடைய கட்சி பெயரை மதுரை மாநாட்டில் அறிவித்தப்போது அங்கு நானும் இருந்தேன். அவரது கட்சியில் இணைவது பற்றி நானும், கமலும் சேர்ந்து பேசிதான் முடிவு பண்ணினோம். அதன்படி இப்போது, அவரது கட்சியில் உறுப்பினராய் சேர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய கொள்கைகள் எனக்குப் பிடித்திருந்தது; இயல்பிலேயே ஆளுமையும், அறிவும் கொண்டவர் கமல். உலகளாவிய பார்வை அவரிடம் இருக்கு. நிறைய புதுமைகளை சினிமாவில் கொடுத்தவர். அதேபோல் நிறைய புதுகட்டமைப்புகளை அரசியலிலும் கொண்டு வருவார்.

கமல் அரசியலுக்கு வந்தது அவரின் தனிப்பட்ட விருப்பம். ரொம்ப காலமா அவர் யோசித்துதான் முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறேன். மக்களுடைய மிகப்பெரிய ஆதரவு கமலுக்கு இருக்கிறது. வரட்டும். யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், என் ஆதரவு கமலுக்குத்தான். ஏன்னா, அவருடன் பயணம் செய்ய ஆசையாகயிருக்கிறது.”

மேலும், “கமல் சொன்னால் கண்டிப்பாக தேர்தலில் நிற்பேன். அப்படியில்லாமல், அவர் கட்சியில் சாதாரண தொண்டனாகயிருந்தும் மக்களுக்கு நல்லது செய்வேன். எப்படி இருந்தாலும் மக்களுக்கு நல்ல அரசியல் மாற்றம் தேவை”, என்று கூறியுள்ளார்.