சூதுகவ்வும் 2 – திரை விமர்சனம் – 3/5

cinema news movie review
0
(0)
சூதுகவ்வும் 2 – திரை விமர்சனம் – 3/5
2013-ம் ஆண்டு ஆள்கடத்தல் செய்த தாஸ் (விஜய் சேதுபதி) கேங்கிற்கு முன்னோடி இந்த குருவின் (சிவா) கேங். சட்டச் சிக்கலால் பணத்தைக் கொள்ளையடித்து சிறை செல்கிறார் குரு. நிகழ்காலத்தில் அவர் சிறையிலிருந்து வெளியே வர, மீண்டும் தன் கேங்குடன் ஆள்கடத்தல் செய்யத் தொடங்குகிறார்.
இதே காலகட்டத்தில் நிதியமைச்சராகப் பல சொத்துகளைக் குவித்திருக்கிறார் அருமைபிரகாசம் (கருணாகரன்). ஒரு கட்டத்தில் ஒரு ரிவெஞ்ச் காரணத்துக்காக அருமைபிரகாசத்தைக் கடத்த நினைக்கிறார் குரு. அதற்கேற்றவாறு அருமையும் அருமையாக ஒரு பெரிய அரசியல் சிக்கலில் மாட்டிக்கொள்ள, அவரே தானாக வந்து குருவின் வலையில் விழுகிறார். அதன்பிறகு நடக்கும் களேபரங்கள்தான் இந்த ‘சூது கவ்வும் 2’.

‘சூது கவ்வும்’ டெம்ப்ளேட்டிலேயே ஒரு கதையை ரெடி செய்து, அதற்கு முன்னும் பின்னும் அதே ‘சூது கவ்வும்’ கதையையே இணைத்து… இல்ல புரியல! இப்படி எக்கச்சக்க முன் பின் கதையை இடியாப்ப சிக்கலாக மாற்றி ‘சூது கவ்வும் 2’வாகத் தந்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன்.

சென்ற பாகத்தில் வந்த டிரேட் மார்க் கதாபாத்திரமான விஜய் சேதுபதியின் தாஸ் கதாபாத்திரத்தின் குருவாக மிர்ச்சி சிவா, ஆனால் அது தந்த தாக்கத்தில் சிறிதுகூட இந்தப் பாத்திரத்தில் இல்லை. டார்க் ஹ்யூமருக்கான மோடுக்குள் நுழையாமல் ‘தமிழ்ப்படம்’ மோடிலேயே சிவா சுற்றுவது துருத்தல். இருப்பினும் ஆங்காங்கே சிரிக்க வைக்க முயல்கிறார். ‘இவருக்குப் பதில் இவர்’ என்னும் கதாபாத்திரத்தில் வரும் ஹரிஷாவும் பெரிதாக நடிப்பில் ஈர்க்கவில்லை. சென்ற பாகத்தின் சிறப்பே அந்தக் கடத்தல் குழுவின் தனித்துவமான நடிப்புதான். அது மொத்தமாகவே இந்த பாகத்தில் மிஸ்ஸிங்! சிவாவுடன் கூட்டணி அடித்திருக்கும் கல்கி ராஜா, ‘நக்கலைட்ஸ்’ கவி இருவரின் நடிப்பும் கதைக்குத் தேவையான வேலையைச் செய்யவில்லை. கதைக்களத்தில் பழக்கப்பட்ட பாத்திரங்களில் வரும் கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், யோக் ஜேபே, அருள்தாஸ் ஆகியோரும் ஏமாற்றத்தையே தருகிறார்கள்..

எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. எந்த இடத்திலும் இடைவேளை இல்லாமல் வாசித்துக் கொண்டே இருக்கும் ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையும் காட்சியின் அழுத்தத்தைக் கூட்டவில்லை. அதே 2013-ம் ஆண்டு பாணியிலான ஒளியுணர்வை கடத்தியிருக்கும் கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவு, யாரைப் பின்தொடர்வது என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. திரைக்கதையில் அங்கொன்றும் இங்கொன்றுமென இஷ்டத்துக்கு இழுக்கப்பட்ட முன் பின் கதைகளையும் ‘சூது கவ்வும்’ படத்தின் பழைய காட்சிகளையும் கஷ்டப்பட்டுத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் இக்னேஷியஸ் அஷ்வின்.

கதையின் ஒரு வரியைச் சொல்லிவிட்டு அதிலிருந்து நீங்கள் தொடரவும் எனப் பக்கத்தில் இருப்பவரைக் கேட்கும் சிறுவயது விளையாட்டை, சற்றே விபரீதமாக விளையாடி இருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன். எந்த நோக்கமும் இல்லாமல் செல்லும் திரைக்கதையில் ரசிப்பதற்கான விஷயங்களைத் தேடினால் ‘ERROR 404’ என்பதே ரிசால்ட்டாகிறது. அடிக்கடி காட்டப்படும் சித்திரவதை அறையான வெள்ளை அறை கதை மாந்தர்களுக்குச் சித்திரவதையாக இருப்பதுபோல ஒரு கட்டத்தில் இந்தப் படமே நமக்கு அப்படி மாறிவிடுகிறது. கடத்தல் காட்சியும் அதனால் ஏற்படும் விளைவுகளும் எந்தவித நோக்கமும் இல்லாமல் புஸ்வாணமாகின்றன.

போதை குறைந்தால் தெரியும் பாம்பு, மற்றவர்களின் கண்ணுக்குத் தெரியாத காதலி, புதிதாகக் காட்டப்படும் மூர்க்கமான வில்லன் என எந்த விஷயங்களும் படத்தின் சுவாரஸ்யத்தை உயர்த்தவில்லை. எழுத்தாக சில ஐடியாக்கள் கவனம் ஈர்த்தாலும் அவை திரையில் தேமேவென விரிவது ஏமாற்றமே! ஒருசில இடங்களில் முதல் படத்தின் காட்சிகளை அப்படியே மறு உருவாக்கம் செய்த தொனியும் மேலோங்குவது கூடுதல் மைனஸ். தான்தோன்றித்தனமாகச் சிதறும் காட்சிகளில் ‘அரசியல் நையாண்டி’ என்கிற பெயரில் மக்களுக்குக் கொடுக்கப்படும் விலையில்லா பொருள்களைக் கிண்டல் செய்வதெல்லாம் நிச்சயம் அரசியல் புரிதலற்ற ஆணிகளே!

மொத்தத்தில் சுவாரஸ்யமற்ற திரைக்கதை, தேவையில்லாத முன்பின் கதைகள் என முதல் பாகத்தின் மீது வைத்திருந்த அத்தனை மதிப்பையும் காலி செய்து நம் நேரத்தைக் கவ்வுகிறது இந்த ‘சூது கவ்வும் 2

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.