சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்சினையை எழுப்பினார்கள். பயணப்படி கேட்டு போராட்டம் நடத்தினார்கள். தயாரிப்பாளர்கள் தரப்பில் பயணப்படி அதிகமாக வழங்க ஒத்துக்கொள்ளாததால் பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பை நிறுத்தினார்கள்.
இந்த பிரச்சினை குறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சங்க தலைவர் விஷால் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், படப்பிடிப்புகளைப் பெப்சி தொழிலாளர்கள் நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளைத் தயாரிப்பாளர்கள் நடத்திக்கொள்ளலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடந்த பெப்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆகஸ்டு 1ம் தேதி முதல் பெப்சி தொழிலாளர்கள் யாரும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் முடிவெடுக்கப்பட்டது.
சினிமா படப்பிடிப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பெப்சி அறிவித்த இந்த வேலை நிறுத்தத்திற்கு தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் ஆதரவில்லை என்றும், இதேபோல் நடன இயக்குநர் ஷோபி மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு ஆகியோரும் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.