ஸ்டைலிஷ் வில்லனாக தென்னிந்திய சல்மான்கான்

News
0
(0)

அழகு ஹீரோ, “தென்னிந்தியாவின் சல்மான்கான்” என நடிகர் சத்யராஜால் ​புகழாரம் சூட்டப்பட்டவர் ஷாம்.

கமல், விக்ரமிற்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க அதிகமாக மெனக்கிட்டவர், ரிஸ்க் எடுத்தவர். ‘6 மெழுகுவர்த்திகள்’ படத்தில் மெலிந்தார். கண்களை வீங்கச் செய்தார். தனது மெனக்கிடலை அற்புதமான நடிப்பால் படத்தை மெருகேற்றியவர். ‘புறம்போக்கு’ படத்தில் மெக்காலேவாக அசத்தியவர். ஆனால் எந்த விருதுகளாலும் கண்டுகொள்ளப்படவில்லை இதுவரை.

இப்படி புறக்கணிக்கப்பட்டதாக நீங்கள் வருத்தப்பட்டதில்லையா? என்றால் மெல்ல சிரிக்கிறார். இல்லை. வருத்தம் விருது கிடைக்காததில் இல்லை. ஒரு தோல்வியில் இருக்கும் நடிகன் நல்ல படம் கொடுக்க முடியாது என்ற மக்களின் நம்பிக்கைதான் வருத்தமளித்தது. 6 படத்தில் அதிக உழைப்பைப் போட்டேன். ஷாமால் இதுவும் செய்ய முடியும் என நிருபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டேன்.

மக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்? என்பதைப் படமாக்கியிருந்தோம். அந்த கருத்தும் பயமும் அவர்களைச் சென்றடைந்திருக்கவேண்டும். அது தியேட்டர் மூலமாக நடக்கவில்லை. ஆனால் ஜீ தமிழ் மூலம் மிக தாமதமாக சென்றடைந்தது. வெற்றி பெற்றவர்கள், தோல்வியானவர்கள் என்று படம் பார்க்காமல் நல்ல படமா பார்ப்போம் என்ற மன நிலை இருந்திருந்தால் அந்த படம் மிகப்பெரிய வெற்றியைக் கொண்டாடியிருக்கும். இப்போது அந்த மனநிலை மக்கள் மத்தியில் வந்திருக்குன்னு நினைக்கிறேன். படம் வெற்றிபெறுவதும், அடுத்த நல்ல கதையில் நடிப்பதும்தான் உண்மையான விருது என்பது என் நம்பிக்கை. அப்படி பார்த்தால் என் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப நாட்களிலிருந்தே நான் விருதுகளால் மகிழ்விக்கப்பட்டவன்தான்.

இன்னொன்று, ஒன்று கிடைத்தால் நல்லது. கிடைக்கலைன்னா ரொம்ப நல்லதுன்னு நினைப்பதால் இந்த வருத்தம் இருப்பதில்லை. இன்னும் நிறைய படஙள் நடிக்கப்போகிறோம். காலங்கள் இருக்கு. கிடைக்காமலா போகும்? அதுதானே யதார்த்தம் என்றவர், ஒன்று மட்டும் சொல்வதாக இருந்தால், விருது வழங்குபவர்களும் பெரிய படங்கள் என்று பாராமல் முக்கியமான படங்கள் என்ன பேசியிருக்கிறது என பார்க்க வேண்டும் என்றார்.

சத்யராஜ், அரவிந்த சாமி, மாதவனுக்கு ஜாக்பாட் அடித்த மாதிரி ‘பார்ட்டி’ படத்தின் மூலம் உங்களுக்கும் அடிக்க வாய்ப்பு இருக்கா? என்று கேட்ட போது, “நல்ல இயக்குநர்களால் மட்டுமே அது முடிவு செய்யப்படுகிறது. சரியாகச் சொல்லப்போனால் அந்த படம் மக்களை பார்க்க வைக்கக் கூடிய தயாரிப்பு நிறுவனத்திலிருந்து வெளியே வரவேண்டும். இப்போது ஃபிஜியில் ‘பார்ட்டி’ பண்ணிக்கொண்டிருக்கிறேன். வெங்கட் பிரபு அண்ணன் இயக்கும் படம். அம்மா கிரியேசன்ஸ் சிவா அண்ணன் தயாரிப்பு.

இதில் ஒரு அழகான, ஸ்டைலிஷ் கேங்ஸ்டர். நீங்கள் எதிர்பார்ப்பது இந்த பார்ட்டி படத்தின் மூலமும் நடக்கலாம். வெங்கட் அண்ணன் இயக்கிய மங்காத்தா அஜித் சாருக்கு ஏகப்பட்ட இளைஞர்களை ரசிகர்களாக இழுத்து வந்தது. எனக்கும் ஏதோ மாற்றம் நடக்கும்னு நம்பிக்கை இருக்கு. சிவா அண்ணன் ஒரு நாள் போனில் கூப்பிட்டு கிளம்புங்க ஃபிஜிக்குன்னார். கிளம்பி வந்துவிட்டேன். என் மீது அவருக்கு ஒரு சொந்த சகோதரன் போல அன்பு உண்டு. அதனால் மறு கேள்வி கேட்காமல் கிளம்பிவிட்டேன். பார்ட்டி படத்துல பிரச்சனை பண்ணக்கூடிய மனதில் பதியக்கூடிய ரோல் பண்ணிக்கிட்டிருக்கேன். அவ்வளவு இளமையான, ஜாலியான டீம் இது. இருப்பதே பார்ட்டி பண்ற மாதிரிதான் இருக்கு.

ஸோ, இதிலேயே என் இன்னொரு இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கலாம்.

தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் நடிப்பதுமில்லாமல், சமயத்தில் ஜெயம் ரவி, அர்ஜூனுக்கு வில்லனா ஹீரோ இமேஜ் பார்க்காமல் இறங்கிவிடுகிறீர்களே?

எங்கே வேணா யார்கூட வேணா நடிக்கலாம். என்னவா நடிக்கிறோம்கிறது முக்கியம். நண்பர் ஒருவர் சொன்னார். கடைசி வரைக்கும் நல்லவனாகாம செம வில்லனா ஒரு படம் நடிங்க. அது உங்களை மக்கள் மத்தியில் நெருக்கமாக்கும்னார். நானும் ஏகப்பட்ட கதை கேட்டேன். சரியா ஹெவியா இல்லை எதுவும். இது அவர் சொன்னது, தனியொருவனுக்கு முன்னாடியே.. ஆனால் அரவிந்த் சாமிக்கு மாட்டிச்சி பாருங்க. மனுஷன் பிரிச்சி மேய்ஞ்சிட்டார். பண்ணலாம். ஆனா செம வில்லன் ரோலா இருக்கணும். அது மாதிரி நினைத்து எதிர்பார்த்து பண்ணிய படங்கள் அவை. ‘தில்லாலங்கடி’ தெலுங்கில் ’கிக்’ ஆக வந்து எனக்கு பெரிய பேர் வாங்கிக் கொடுத்த படம். தமிழில் எதிர்பார்த்த அளவில் அமையாதது வருத்தம்தான்.

​காவியன்?

முடிந்துவிட்டது. யு எஸ்ஸில் சூட் பண்ணிய கார் ரேஸ் பற்றிய படம். வழக்கம் போல கடின உழைப்பை போட்டிருக்கிறோம். விரைவில் வெளியாக இருக்கிறது என்றார் நடிகர் ஷாம்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.