சென்னையில் ஒரே நாள் பெய்த மழையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகள், சுரங்கபாதைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அடையாறில் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, டி ஜெயக்குமார், பா பென்ஜமின் ஆகியோர் பார்வையிட்டனர். மழைநீரை உடனே வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, “மழை வெள்ளம் தடுப்பு நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 15 மண்டலத்திற்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தி வருகிறோம்.
மழைநீர் தேங்கிய பகுதியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 13 இடங்களில் தண்ணீர் தேங்கியதையடுத்து உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் சரி செய்து வருகிறோம்.
2015-ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பையும் இப்போது உள்ள சூழலையும் ஒன்றாக ஒப்பிட்டு பார்க்கக் கூடாது.
எதிர்க்கட்சி தலைவர் எந்த பணியும் நடக்கவில்லை என்று கூறி வருகிறார். இந்த ஆட்சி மாற வேண்டும் என்பதில் அவர் முனைப்புடன் இருக்கிறார். கொளத்தூரில் பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட பணிகள் நடந்து வருகிறது.
தற்போது மழைக்காலம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.” என்றார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 3 அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.