2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில், அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, கடந்த 2008ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இதுபற்றிய வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.
இந்த நிலையில், 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதியுடன் முடிவடைந்தது.
இந்த வழக்கில் 21-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 5-ந் தேதி அறிவித்தார். அதன்படி இன்று முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மற்றும் ராஜ்யசபை எம்.பி.யான கனிமொழி ஆகியோர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு வருகை தந்தனர்.
இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பில் 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.