ஸ்பைடர் – விமர்சனம்

Movie Reviews

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா, பரத் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘ஸ்பைடர்’

மகேஷ் பாபுவின் நேரடித் தமிழ்ப்படமான இதில் அவர் உளவுத்துறைக்காக பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டு, சமூக விரோதிகளைக் கண்டறிந்து கூறும் வேலை செய்கிறார். மிகவும் திறமைசாலியாக இருக்கும் அவர், அரசுக்குத் தெரியாமல், தனிப்பட்ட முறையில் சாப்ட்வேர் ஒன்றைத் தயார் செய்து, அதன் மூலம் அப்பாவி மக்கள் யாராவது கடத்தல்காரர்கள், கொலைகாரர்களின் வலையில் சிக்கிக்கொள்ள இருப்பதைக் கண்டறிந்து, குற்றம் நடப்பதற்கு முன்னரே அவர்களைக் காப்பாற்றவும் செய்கிறார்.

ஒரு கட்டத்தில் மாணவி ஒருவர் பிரச்சனையில் சிக்கிக்கொள்ள இருப்பதை அறிந்து, அவளைக் காப்பாற்ற, காவலரான தனது தோழியை அனுப்புகிறார். மறுநாள், மகேஷ்பாபுவுக்கு அந்த மாணவியும், தனது தோழியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. அந்த கொலைக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் அவருக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கின்றன.

கொலைக்கான காரணத்தையும், கொலைக்கு காரணமான பரத்தையும் கண்டுபிடிக்கும் மகேஷ்பாபுவுக்கு, பரத் பின்னணியில் அவரின் அண்ணன் எஸ் ஜே சூர்யா இருப்பது தெரிய வருகிறது. மகேஷ் பாபு, எஸ் ஜே சூர்யாவை கண்டுபிடித்தாரா? பரத், எஸ் ஜே சூர்யா நிலை என்ன ஆனது என்பதே படத்தின் கதை.

தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் மகேஷ் பாபு, இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். ஸ்டைலிஷ் ஹீரோவாகவும், உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ள காதலுக்காகவும், பாடல் காட்சிகளுக்காகவும் கதாநாயகியாக வந்து போகும் ரகுல் ப்ரீத் சிங் ரசிகர்களைக் கவர்கிறார்.

ஒரு சில காட்சிகளே என்றாலும் பரத் மனதில் பதிகிறார். படத்திற்கு மிகப்பெரிய பலம் சைக்கோ வில்லன் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் எஸ் ஜே சூர்யா தனது மிரட்டலான நடிப்பின் மூலம் அதற்கு மேலும் பலம் கூட்டி இருக்கிறார்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும், ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணியும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் அருமை. பாடல்கள் கேட்கும் ரகம். கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

ஒவ்வொரு படத்திலும் ஒரு புதிய கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து அதில் ஒரு சமூகக்கருத்தைப் பதிவு செய்யும் ஏ ஆர் முருகதாஸ் இந்த படத்திலும் அதைச் சிறப்பாக செய்திருக்கிறார். புதிய தளத்தில் புதிய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். கொலைகளைச் செய்ததற்கும், கொலைகாரனாக எஸ் ஜே சூர்யா மாறியதற்கும் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் காரணம் வித்தியாசமான ஒன்று. தெலுங்கு ரசிகர்களைக் கவர முயற்சித்து, செய்துள்ள சில லாஜிக் மீறல்களால்…

சினிமாவின் பார்வையில் ‘ஸ்பைடர்’ – தவறுகிறான்.