தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழ் சினிமா முடங்கியுள்ளது. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக பெப்சி சம்மேளத்தை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். வேலைநிறுத்தம், படப்பிடிப்பு ரத்து காரணமாக தங்களது அன்றாட பிழைப்பை நடத்த முடியாமல் சிலர் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தங்களது குழந்தைகளின் பள்ளி செலவிற்கு கூட பணமில்லாமல் சிலர் தவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில், பெப்சி ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க பொருளாளருமான எஸ்.ஆர்.பிரபு ரூ.10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதேபோல் தயாரிப்பாளர்கள் பலரும் பெப்சி ஊழியர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.