திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி (53) மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார். குறைந்த ரத்த அழுத்தத்தால், ஸ்ரீதேவிக்கு மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
உயிர் பிரிந்த நிலையில்தான் ஸ்ரீதேவியின் உடல் துபாயில் உள்ள ரஷித் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது ஸ்ரீதேவியின் உடல் அல் குவாசிஸ் பகுதியில் உள்ள காவல்துறை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் தடயவியில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை குறித்த முழு அறிக்கை தயாராகாததால், ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், பரிதேச பரிதசாதனை முடிந்து இன்று மாலைக்குள் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக அம்பானிக்கு சொந்தமான தனி விமானம் ஒன்று துபாய் விரைந்துள்ளது.
இந்தியா கொண்டுவரப்படும் ஸ்ரீதேவியின் உடலுக்கு முதற்கட்ட சடங்குகள் செய்த பின்னர், அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. பின்னர் உடலை நாளை தகனம் செய்ய ஸ்ரீதேவி வீட்டார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், இயக்குநர் பாரதிராஜா, நடிகை ஹன்சிகா விமானம் மூலம் மும்பை விரைந்துள்ளனர். கலைத்துறையை சேர்ந்த மேலும் பலர் மும்பை செல்லவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.