தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் தமிழ், இந்தி படங்களில் முன்னணி இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ‘புலி’ படங்களில் நடித்தார். இப்போது ஸ்ரீதேவி ‘மாம்’ (அம்மா) என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்தை, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ரவி உதயவார் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நடிகை ஸ்ரீதேவியுடன், அக்ஷய் கண்ணா, நவாஸுதீன், சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
‘மாம்’ படத்தின் முதல் போஸ்டரை நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் இணையதளத்தில் வெளியிட்டனர். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் மாம் படக்குழுவினருடனான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி, போனி கபூர், ஏ ஆர் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய மாம் பட தயாரிப்பாளரான போனி கபூர், “இந்த படம் உறவுகளுக்கிடையேயான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படமாக உருவாகியிருக்கிறது. அறிமுக இயக்குநர் ரவி உதயவார் அனுபவ இயக்குநர் போல் இப்படத்தை இயக்கியுள்ளார்.” என்றார்.
ஏ ஆர் ரகுமான், “இது ஹிந்தி படம் தான் ஆனாலும் உலகத்திற்கே சொல்லும் படமாக இருக்கும். இந்த படத்தில் ஒரே பாடல் தான். அதுவும் கதையுடன் ஒன்றிய பாடலாக இருக்கும்.” என்றார்.
இவர்களைத் தொடர்ந்து பேசிய நடிகை ஸ்ரீதேவி, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மாம் படம் மூலம் தமிழுக்கு வருகிறேன். மிகவும் எளிமையான கதை. ஆனால், இது உணர்ச்சி பூர்வமாகவும், உலக தரத்திற்கும் மாம் படம் இருக்கும். தமிழ் திரையுலகம் எனக்கு நிறைய அன்பு கொடுத்திருக்கிறது. மீண்டும் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. தற்போது என் கணவர் மூலம் இந்த ஆசை நிறைவேறியிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமானின் இசைக்குப் பிறகு ‘மாம்’ திரைப்படம் வேறொரு பரிமாணத்தில் வந்திருக்கிறது.
என் கணவர்தான் இந்த படத்தில் நடிக்க முக்கிய காரணம். இந்தப் படம் இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான படம். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். உலகத்தில் உள்ள அனைத்து அம்மாவிற்கும் இப்படத்தை நான் சமர்ப்பிக்கிறேன். நல்ல கதை அமைந்தால், தொடர்ந்து தமிழில் நடிப்பேன். ஒரு உண்மையான அம்மாவாக ஒரு பெண்ணுக்கு முதலில் பாதுக்காப்புதான் முக்கியம். நான் சினிமாவில் நடிப்பதற்கு என் அம்மா முக்கிய காரணமாக இருந்தார். என் அம்மாவிடம் கற்றுக் கொண்டதில் 50 சதவிகிதம் என் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திருந்தால் அதுவே பெரிய அதிசயம் தான்.” என்றார்.