full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நடராஜன் உடலுக்கு மு.க.ஸ்டாலின், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராஜன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அளித்த பேட்டியில், ‘நடராஜனின் மறைவு அவரது குடும்பத்திற்கு, திராவிட இயக்கங்களுக்கு பேரிழப்பு. நடராஜனின் நினைவைப் போற்றும் வகையில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்றும் இருக்கும்’ என தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் கூறும்போது, ‘புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர் பருவத்திலேயே தமிழ் மொழிக்காக நடந்த போராட்டத்தில் பங்குபெற்றவர். திராவிட இயக்கத்தின் மீது அளவு கடந்த பற்று கொண்டவராக விளங்கினார்’ என்றார்.

நடராஜன் உடல் 11 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.