“விலகி இருத்தல்…”- வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கமல்!
இந்திய அளவில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று, இந்திய அளவில் மிக வேகமாக பரவிவரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், புதிய விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் கமல், “கொரோனா பரவுதலில் 4வது வாரத்தில் இருக்கிறது இந்தியா. இந்த வாரத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவும் என்பதை பல நாடுகளில் பார்த்து வருகிறோம். ஆகையால் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயம் சோஷியல் டிஸ்டன்சிங். விலகி இருத்தல். மற்றவர்களிடத்தில் இருந்து நாம் விலகி இருத்தல் என்பதுதான், தற்போதைக்குக் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஒரே வழி. எந்த சமரசமும் இல்லாமல் இதை நாம் பின்பற்ற வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், கொரோனாவின் தாக்கம், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் செய்ய வேண்டியது உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடி, இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர், “அடுத்து வரும் சில வாரங்களுக்கு அவசியம் ஏற்பட்டாலே தவிர, மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். மக்கள் ஊரடங்கு உத்தரவை ஞாயிறு முதற்கொண்டு பின்பற்றி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிருங்கள்.
நாம் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் உத்தரவுகளை ஏற்று நடக்க வேண்டும். உணவு போன்ற அடிப்படை தேவைப் பொருட்களை பதுக்க வேண்டாம். பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா வைரஸ் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. நிதியமைச்சர் தலைமையிலான குழு இதனை சரி செய்யும். நமக்கு சேவைகளைத் தொடர்ந்து வழங்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கெள்ளுங்கள். ஞாயிறன்று மாலை 5 மணிக்கு வீட்டின் மொட்டை மாடி அல்லது ஜன்னலுக்கு வந்து 5 நிமிடம் நில்லுங்கள். அப்போது கைகளை தட்டி, மணியடித்து உங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.
கொரோனாவை சரி செய்ய மருந்து கிடையாது. நாம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். வழக்கம்போல சுதந்திரமாக நடமாடினால் நீங்கள் உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் ஆபத்தில் தள்ளப் பார்க்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்,” என்று உரையாற்றினார்.
இந்திய அளவில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.