full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

இன்று முதல் ஸ்ட்ரைக்!

கியூப் கட்டணத்தை எதிர்த்து பட அதிபர்கள் இன்று முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதற்காக அந்த அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கின்றன.

புதிய படங்களை திரையிடுவதற்கு டிஜிட்டல் சேவை அமைப்புகள் ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினர். இதுபோல் மலையாளம், தெலுங்கு, கன்னட திரைப்பட தயாரிப்பாளர்களும் டிஜிட்டல் சேவை கட்டணத்தை குறைக்க வற்புறுத்தினர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) முதல் புதிய படங்களை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் வெளியிடமாட்டோம் என்றும் அறிவித்தனர். இந்த போராட்டத்தை கைவிட தயாரிப்பாளர்களுக்கும், டிஜிட்டல் சேவை அமைப்பினருக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த பிரச்சினையில் இறுதி முடிவு எடுப்பது குறித்து ஆலோசிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் டிஜிட்டல் சேவை கட்டண விகிதங்களுக்கு எதிராக புதிய படங்களை வெளியிடுவதை இன்று (வியாழக்கிழமை) முதல் நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வற்புறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த இரும்புத்திரை, கரு, பக்கா, எனை நோக்கி பாயும் தோட்டா, உத்தரவு மகாராஜா, சுட்டுப்பிடிக்க உத்தரவு உள்பட 20-க்கும் மேற்பட்ட படங்கள் தள்ளிப்போகின்றன.