தமிழ் மொழிக்கு சமர்ப்பணம் : சுந்தர் சி

News

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா’. ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படத்தின் தொடக்க விழா அடுத்த வாரம் (மே 18-ல்) பிரான்சில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில், அதாவது ரூ. 300 கோடி செலவில் உருவாக உள்ள இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 101-வது படமாக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

அதற்காக பிரான்ஸ் சென்றுள்ள `சங்கமித்ரா’ படக்குழு, அந்த விழாவில் பங்கேற்பவர்கள் அறியும் விதமாக படம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், 8-ஆம் நூற்றாண்டில் நடக்கும் வரலாற்றுக் கதையில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படம், சங்கமித்ரா என்னும் பதுமையை மையமாக வைத்து உருவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சங்கமித்ரா என்ற அழகி, அவளது ராஜ்ஜியத்தை காப்பாற்ற அவள் மேற்கொள்ளும் பிரச்சனைகள், துயரங்களை கூறும் கதையாக இப்படம் உருவாக உள்ளது.

அதுமட்டுமின்றி அவளது நாட்டை சுற்றியுள்ள ராஜ்ஜியங்கள், அதன் பெருமைகள், உறவுகள், அதன் பாரம்பரியத்தை உள்ளடக்கிய இப்படம் இரண்டு பாகமாக உருவாக இருக்கிறது. தொன்மையான தமிழ் மொழிக்கு இப்படம் சமர்ப்பணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இப்படத்திற்காக ஆர்யா, ஜெயம் ரவி இருவரும் ஒன்றரை வருடம் கால்ஷீட் கொடுத்ததுடன், தங்களது உடல் எடையையும் அதிகரித்து வருகின்றனர். அதேநேரத்தில் குதிரை சவாரி, வாள் சண்டை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜுன் முதற்பாதியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.