அடுத்த ஆண்டு முதல் சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக மாநிலங்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. மேலும் சமையல் எரிவாயுவின் விலை மாதந்தோறும் ரூ.4 உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சமையல் எரிவாயு குறித்த அறிவிப்பிற்கு பல்வேறு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதேபோல், பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் இன்று எதிரொலித்தது.
சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது என்று மாநிலங்களவையில் மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். யாருக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்குவது என்பது குறித்து மட்டும் தொடர்ந்து சீரமைக்கப்படும் என்று கூறினார்.