இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது – பாரதிராஜா கண்டனம்

News
0
(0)

இரண்டாம் குத்து பட போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து மூத்த இயக்குனரும், தமிழ் திரைப்பட நடப்பு தயரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப் பட்டிருக்கிறது. மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப் பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர் களை உருவாக்குவது சாத்தியப் பட்டிருக்கிறது. உலகம் எங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ எத்தனை சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சாதாரண மல்ல.

பல கலைஞர்கள் கட்டியமைத்த கூடு. தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக் காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்.

சினிமா வியாபாரமும் தான்… ஆனால் வாழைப்பழத்தை பயன்படுத்தி கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அந்த வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது. இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த சினிமாவைக் கட்டமைத்தார்கள்? சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை.

இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத் தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது? நான் கலாச்சார சீர்கேடு எனக் கூவும் நபரல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன். கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன். ஆனால் “இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்.

இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்? இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது… நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன்.

இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா?? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன். இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப்பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன். சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்.

எத்தனை கற்பழிப்புகள்…? குழந்தைச் சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்பதை மக்களும் உணர்ந்து கொள்ளுங்கள்.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.