
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மற்றொரு வேடத்திலும் வருகிறார். அதை ரகசியமாக வைத்துள்ளனர். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்தின் முந்தைய படங்களான காலாவில் நானா படேகரும், 2.0 படத்தில் அக்ஷய்குமாரும் வில்லனாக நடித்திருந்தனர்.

அந்த வகையில் தர்பார் படத்தில் பிரதிக் பாபர், தலிப் தாஹில், சுமன், ஆனந்தராஜ் ஆகியோர் வில்லத்தனமான வேடங்களில் வருவதாக கூறப்பட்டது. இப்போது இன்னொரு முக்கிய வில்லனாக பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் ‘12பி’ படத்தில் நடித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கானின் ‘மெய்ன் ஹூன் நா’ என்ற இந்தி படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அதன்பிறகு தர்பார் படத்தில்தான் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தர்பார் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் சுனில் ஷெட்டி கலந்து கொள்வார் என்றும், அப்போது ரஜினிகாந்துடன் அவர் மோதும் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.