full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சூப்பர் டீலக்ஸ் – விமர்சனம் 3.50/5

கல்லூரியில் படிக்கும் போது காதலித்த காதலனை, கணவன்(பஹத் பாசில்) இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வரவைக்கிறார் சமந்தா. இருவரும் தனிமையில் இருக்கும் போது, திடீரென நெஞ்சுவலியில் இறந்துவிடுகிறார் அந்த காதலன்.

அந்நேரம், வீட்டிற்கு வரும் பஹத் பாசில், உண்மையறிந்து கோபமடைகிறார். பின், வேறு வழியின்றி அந்த பிணத்தை மறைக்க சமந்தாவும் பஹத் பாசிலும் போராடுகின்றனர்.

தாலி கட்டிவிட்டு சில நாட்களிலே வீட்டை விட்டு ஓடிய கணவனுக்காக(விஜய் சேதுபதி) தனது 8 வயது மகனுடன் காத்திருக்கிறாள் காயத்ரி. ஒருநாள் விஜய் சேதுபதியும் வருகிறார் ஒரு திருநங்கையாக (ஷில்பா)… செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர் குடும்பத்தினர். தனது கணவன் வந்து விட்டார் என்று சந்தோஷப்படுவதா..?? தனது கணவன் ஒரு பெண்ணாக வந்திருக்கிறாரே என்று எண்ணி துயரப்படுவதா..?? என்ற மன நிலைக்கு தள்ளப்படுகிறார் காயத்ரி. இச்சமூகம் ஷில்பாவை எப்படி பார்க்கிறது..??

பள்ளி சிறுவர்கள் ஐந்து பேர்.. அன்று ஒரு நாள் பள்ளிக்குச் செல்லாமல் நண்பனின் வீட்டில் ‘பிட்’ படம் பார்க்கின்றனர். அந்த படத்தில் நடித்தது ஐவரில் ஒருவனின் அம்மா(ரம்யாகிருஷ்ணன்). கோபத்தில் அவன், டிவியை உடைத்து விடுகிறார். தனது அம்மாவை கொலை செய்ய ஓடுகிறான். ரம்யா கிருஷ்ணனின் கண் முன்னே தவறி விழுந்து கம்பி அவனுடைய வயிற்றில் குத்தி விடுகிறது. அவரை காப்பாற்ற தவிக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இவரது கணவர் மிஷ்கின். ஒரு கிறிஸ்தவ ஜெப ஊழியர்.

அந்த பள்ளி சிறுவர்களில் மூவர் உடைந்த டிவியை வாங்குவதற்காக பல குறுக்க வழிகளில் செல்கின்றனர். அவர்களின் திட்டம் பழித்ததா,..??

இப்படி நான்கு கதைகளை கொண்டு பயணிக்கும் படம் தான் இந்த ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்த நான்கு கதையும் ஒன்றை ஒன்று சம்பந்தப்படுத்துகிறதா.. இல்ல ஒரு கதையின் பாதிப்பு மற்றொரு கதையுடன் தொடர்பு படுத்துகிறதா என்பதே படத்தின் கதை.

திருநங்கையாக வரும் விஜய் சேதுபதிக்கு எழுந்து நின்று தான் சல்யூட் அடிக்க வேண்டும். ’என்னா மனுசன்யா நீ.. இப்படி நடிக்கிற’ என்று ஒவ்வொரு காட்சியிலும் கேட்க வைக்கிறார். மகனை இழந்து அவர் தவிக்கும் காட்சிகளை நெஞ்சை கனக்க வைக்கின்றன. குடும்ப பெண்ணாக வரும் காயத்ரி தேர்ந்த நடிப்பு தான். இவர்களின் மகனாக வரும் அந்த சிறுவன் தான் ஹைலைட்.. டயலாக் டெலிவரி, துருதுருவென நடிப்பு என அனைத்திலும் கைதட்டல் வாங்குகிறார்.

 

 

சமந்தா மற்றும் பஹத் பாசிலின் நடிப்பு படத்தின் உச்சம். பல படங்களுக்குப் பிறகு சமந்தாவிற்கான படமாக இது அமைந்துள்ளது. அநேக இடங்களில் பஹத் பாசில் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது.

தனது மகனின் உயிரை காப்பாற்றுவதற்காக போராடும் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை நிச்சயம் பாராட்ட வேண்டும். நண்பர்களாக வரும் மூன்று சிறுவர்களின் நடிப்பு அப்ளாஷ். சப்தமே இல்லாமல் காமெடியை வாரி இறைக்கிறார்கள்.

படத்திற்கு திரைக்கதை அமைத்த மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே சேகர், தியாகராஜன் குமாரராஜா ஆகிய நான்கு இயக்குனர்களுக்கும் பாராட்டுகள். மிகக் கச்சிதமாக இயக்கிய தியாகராஜா குமாரராஜாவின் பல வருட உழைப்பு கண்முன்னே தெரிகிறது.

பல வருடங்களுக்கு முன் ஆரண்ய காண்டம் என்ற படத்தை கொடுத்த தியாகராஜா குமாரராஜா இப்படத்தையும் இயக்கியுள்ளார்.

மிக கலகலப்பாக முதல் பாதி நகர்கிறது. இரண்டாம் பாதி சற்று இழுத்தடிப்பதால் பொது ரசிகர்கள் ரசிப்பார்களா என்பதில் சிறு சந்தேகம்.. மற்றபடி சினிமா ரசிகர்களுக்கு ஒரு தரமான விருந்துதான் இந்த ‘சூப்பர் டீலக்ஸ்’.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னனி இசை கதையின் நகர்வு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது.

நிரவ் ஷா மற்றும் பி எஸ் வினோத் இருவர்களின் ஒளிப்பதிவு அழகு.

சூப்பர் டீலக்ஸ் –சம்மருக்கு  நல்ல பொழுதுபோக்கு