full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு கடந்த மே 6-ம் தேதி புதிய அரசாணை வெளியிட்டு, அதன் அடிப்படையில் மே 7-ம் தேதி மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியலையும் வெளியிட்டது. கிராமப்புறங்களில் சேவையாற்றிய மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணை மற்றும் கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த டாக்டர் பிரணிதா உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், மே மாதம் நடத்தப்பட்ட முதுநிலை மருத்துவ மேற்படிப்பிற்கான அரசாணை மற்றும் தகுதிப்பட்டியலை ரத்து செய்தது. அத்துடன், புதிய தகுதிப் பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.

அப்போது, கிராமப்புறங்களில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் தமிழக அரசின் அரசாணை செல்லும் என்றும், தமிழக அரசு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், கல்வி தொடர்பான விவகாரங்களில் இதுபோன்ற தடை உத்தரவுகள் பிறப்பிப்பதை உயர்நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.