full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

நீதிபதி கர்ணனுக்கு எதிரான உச்சநீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது: மேற்கு வங்க டிஜிபி

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் கூறியதையடுத்து, கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவர் நீதிபதி பணியை செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந் தேதி உத்தரவிட்டது. மேலும், கடந்த 4–ந் தேதி அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. ஆனால், நீதிபதி கர்ணன் அதற்கு மறுத்து விட்டார்.

இந்நிலையில், நீதிபதி கர்ணன் நேற்று முன் தினம் ஓர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தனக்கு எதிரான அவமதிப்பு வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோருக்கும், தன்னை நீதிபதி பணியாற்ற தடை விதித்த நீதிபதி பானுமதிக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார். நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவிட்டது. மேலும் நீதிபதி கர்ணனை மேற்கு வங்காள டி.ஜி.பி. உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தந்தி டிவிக்கு மேற்கு வங்காள மாநில டிஜிபி அளித்த பேட்டியில், “ நீதிபதி கர்ணனுக்கு எதிரான உச்சநீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை பரிசீலித்து வருகிறோம், அமல்படுத்துவது குறித்து எந்த தகவலும் தற்போது வெளியிட முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.